இஸ்லாமியப் பெண்களுக்கு ஹிஜாப், புர்கா எல்லாம் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும் என்று கருத்து கூறியுள்ளார் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
இந்தியாவை உலுக்கி வரும் ஹிஜாப் சர்ச்சை குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், ஒரு முஸ்லிம் பெண்ணை ஒரு பெருங்கூட்டமே துரத்தும் வீடியோவைப் பார்த்தேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு அவருடைய வாழ்க்கை முறையைப் பின்பற்ற அடிப்படை உரிமை உள்ளது. அப்படியிருக்க இது என்ன மாதிரியான அடக்குமுறை.
நான் ஒரு முஸ்லீம் நாட்டுல 22 வருடங்கள் இருந்திருக்கேன். அதனால சொல்றேன் ஹிஜாப்-க்குள்ள இருந்து பழகினவங்களுக்கு அது ரொம்ப பாதுகாப்பான உணர்வு. அதை நீக்க சொல்றது அவங்களுக்கு ரொம்ப காயம் தரக்குடிய விஷயம், இது ஒரு மனிதநேயமற்ற செயல். இதற்காக சின்ன பசங்களை தூண்டிவிட்டு போராட்டம் பண்றது, இதுல கைய வைப்பது ரொம்ப தப்பான விஷயம். இதை நான் ஒரு குடிமகளாகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இதற்குப் பின்னால் யார் இருந்தாலும் தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். ஊடகங்களும் இதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.
இந்த மாதிரி ஒரு பாதுகாப்பற்ற உணர்வு முஸ்லீம் பெண்களுக்கு கொடுக்கிறது ரொம்ப தவறானது. யாராக இருந்தாலும் அவங்களோட வாழ்க்கைய அவங்க விருப்பப்படி’ மரியாதையோட கடைபிடிக்கிறதுக்கு’ எல்லாருக்கும் உரிமை இருக்கு. மீடியாவுக்கு ஒரு கோரிக்கை. இதுல பூணூலை இழுக்காதீங்க. இன்னொரு சுற்று வெறுப்பை உருவாக்காதீங்க. தமிழக முதல்வரும், பிரதமரும் தயவு செய்து இதுக்கொரு முற்றுப்புள்ளி வைக்கணும் தாழ்மையோட கேட்டுக்கிறேன். இனியும் இது தொடர்ந்தா நாங்க அத்தனை பேரும்’ ஹிஜாப் போட்டு வெளில வர வேண்டியிருக்கும் என லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அவரது பேச்சை பல்வேறு தரப்பினரும் ஆதரித்து, அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
சர்ச்சையின் பின்னணி:
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரி தான் சர்ச்சையின் பிறப்பிடம். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்துவர இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சில மாணவிகள் முடியாது என்று எதிர்க்குரல் எழுப்ப போராட்டம் பெரிதானது. ஹிஜாப் எங்கள் அரசியல் சாசன உரிமை என்ற அந்தப் பெண்கள் முழங்க, இன்னொரு தரப்பினர் காவித் துண்டு, நீலத் துண்டுடன் கல்லூரிகளுக்கு வர ஆரம்பித்தனர். நிலவரம் பதற்றமடைய அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் விவகாரம் கர்நாடக ஐகோர்ட்டை எட்டியது. நீதிமன்ற இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பள்ளியில் யாரும் எவ்வித மத அடையாள உடையையும் அணியக் கூடாது, முழு சீருடையுடன் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. திங்கள் கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள சூழலில் உச்ச நீதிமன்றமும் இதனை தேசிய சர்ச்சையாக்கக் கூடாது என்று கூறி ஹிஜாப் வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க மறுத்துவிட்டது.