தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நபரை தனது சொகுசு காரால் மோதி அவரை பல மீட்டர் இழுத்துச் சென்ற கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கோர விபத்து அடங்கிய காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதறவைக்கிறது.
தெற்கு டெல்லியில் உள்ளது கிரேட்டர் கைலாஷ் பகுதி. இது பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதி. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் 37 வயது தொழிலதிபர் ஆனந்த் மண்டேலியா வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. அவர் காரின் பானட்டில் (முகப்பில்) மாட்டிக் கொள்ள அதைக் கூட கவனிக்கானல் அந்த கார் பறந்தது. 100 மீட்டர் அவர் இழுத்துச் செல்லப்பட்டர். பின்னர் காரில் இருந்து சிறிது தூரத்தில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் மயக்கமடைந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 3 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அந்த நபர் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியின் மகன்; சட்ட மாணவன்:
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி நம்மை பதறவைத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் அதை வைத்தே போலீஸார் விசாரணையையும் துவக்கினர். விசாரணையில் அந்த நபர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகன் ராஜ் சுந்தர் என்பது தெரிய வந்தது. அவர், சட்டக்கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரிந்தது.
அந்த நபரின் மீது ஐபிசி சட்டப்பிரிவு 212, சட்டப்பிரிவு 302 ( கொலை முயற்சி) 308 (மரணம் நிகழும் வகையில் ஆபத்தான செய்கையை செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெற்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் பெனிட்டா மேரி ஜெய்கர் தெரிவித்துள்ளார்.
முதலில் முரட்டுத்தனமான வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்தபின்னரே வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய ராஜ் சுந்தரம் ஹரியாணா மாநிலம் குர்கான் நகரில் உள்ள லீ மெரிடியன் உணவகத்தில் கைது செய்யப்பட்டார்.