கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நான்காவது நாளாக இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மனுதாரர்களான முஸ்லிம் பெண்களின் தரப்பு வாதத்தை இன்று கேட்டுள்ளார்.
தனது மனுதாரர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ரவி வர்மா குமார், நீதிபதிகளிடம், தினமும் மக்களால் அணியப்படும் நூற்றுக்கணக்கான மத அடையாளங்களான துப்பட்டாக்கள், வளையல்கள், தலைப்பாகைகள், சிலுவைகள், பொட்டு முதலானவை அனுமதிக்கப்படும் சூழலில் ஏன் ஹிஜாப் மட்டுமே எதிர்க்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
`சமூகத்தில் வாழும் அனைத்து சமுதாயங்களால் கடைப்பிடிக்கப்படும் வெவ்வேறு விதமான மத அடையாளங்களை மட்டுமே நான் இங்கே சுட்டிக் காட்டுகிறேன். அரசு ஏன் ஹிஜாபை மட்டும் தேர்ந்தெடுத்து, இந்தப் பாகுபாட்டை நடைமுறைப்படுத்துகிறது. கையில் அணியும் வளையல்கள் மத அடையாளம் இல்லையா? ஏன் இந்த ஏழை முஸ்லிம் சிறுமிகளைக் குறி வைக்கிறார்கள்?’ என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, `என் மனுதாரர் தன்னுடைய மதத்தைப் பின்பற்றியதற்காகவே வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் சிறுமிகள் வெளியில் அனுப்பப்படுவதில்லை. வளையல் அணியும் சிறுமிகள் வெளியில் அனுப்பப்படுவதில்லை. சிலுவை அணியும் கிறித்துவர்களை யாரும் தொடுவதில்லை. அப்படியிருக்கும் போது, இந்த சிறுமிகளை மட்டும் குறிவைப்பது ஏன்? இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான 15ஆம் சட்டப்பிரிவுக்கு எதிரானது’ எனவும் வழக்கறிஞர் ரவி வர்மா குமார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
`இந்த விவகாரத்தில் வேறு எந்த மத அடையாளமும் குறிவைக்கப்படவில்லை. ஹிஜாப் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது? மதத்தின் காரணமாக இல்லையா? முஸ்லிம் சிறுமிகளுக்கு எதிரான இந்தப் பாகுபாடு மத அடிப்படையிலானது’ என்று வழக்கறிஞர் ரவி வர்மா குமார் வாதாடியுள்ளார்.
ஹிஜாப் அணிந்து வந்ததற்காக பள்ளியில் இருந்து மாணவிகள் விலக்கி வைக்கப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பேசிய வழக்கறிஞர் ரவி வர்மா குமார், `எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எங்கள் தரப்பு நியாயம் கேட்கப்படுவதற்கு முன்பே எங்களுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. இதனை விட கொடுங்கோன்மையான ஆட்சி இருக்க முடியுமா? இவர்கள் ஆசிரியர்கள் என அழைப்பதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் தானா?’ என்றும் கேட்டுள்ளார்.
`மதம் மீதான வெறுப்பே இங்கு நிறைந்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படாமல், அதிகாரம் இல்லாத மனிதர்களால் வகுப்பறைகளை விட்டு மாணவிகள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்’ என்றூம் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் உடை அணிந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தை எட்டியுள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஹிஜாப் மீதான தடையை விசாரிப்பதாகவும், அதுவரை பள்ளியில் அனைத்து வித மத அடையாளங்களுக்கும் தற்காலிகமாகத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.