கடத்தல் என்றால் ஒரு குடும்பம் எப்படி நடுங்கும் என்பதை நாம் சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால் தனது கணவரை நக்சலைட்டுகள் கடத்திவிட்டனர் என்பதை அறிந்த இளம் பெண் ஒருவர் துணிச்சலாக தனது இரண்டரை வயது மகளை தூக்கிக் கொண்டு நக்சல்களின் இடத்திற்கே சென்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர், நாராயணபூர் மாவட்டங்களை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகள் நக்சல் ஆதிக்கம் நிறைந்தது. சிஆர்பிஎஃப், அதிரடி போலீஸ், உளவு அமைப்பினர் எனப் பல அங்கங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் பகுதி.
என்றாலும் இங்கு அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் நடந்துவிடுவது வழக்கமாக இருக்கிறது.
அங்குள் அபுஜ்மத் வனம் நக்சல்களின் கோட்டையாகவே அறியப்படுகிறது. அந்த வனத்தை ஒட்டிய பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று பாலம் கட்டும் ஒப்பந்தத்தை எடுத்திருந்தது. இந்திராவதி ஆற்றின் குறுக்கே பால வேலைகள் நடைபெற்று வருகின்றன. பெட்ரே, நுகுர் கிராமங்களை இணைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
அந்தப் பாலப் பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளர்கள் அசோக் பவார் மற்றும் ஆனந்த் யாதவ் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டனர்.
இந்தத் தகவல் யாதவின் மனைவி சோனாலிக்கு எட்டியது. இதனையடுத்து சோனாலி தனது கணவரை தங்களின் இரண்டரை வயது மற்றும் ஐந்து வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்காக விடுவிக்குமாறு வேண்டி உருக்கமாகப் பேசி சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதற்கு எந்த பதிலும் நக்சல் தரப்பில் இருந்து வரவில்லை. நக்சலைட்டுகள் எங்கே தனது கணவரைக் கொன்று விடுவார்கள் என அஞ்சி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குத் துணிந்தார் சோனாலி.
இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூருக்கு குடும்பத்துடன் வந்தார். தனது ஐந்து வயது மகளை உறவினர்களிடம் விட்டுவிட்டு இரண்டரை வயது மகளை மட்டும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து அவர் அபுஜ்மத் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.
ஆனால் அதற்குள் நக்சலைட்டுகள் பொறியாளர் அசோக் பவார் மற்றும் தொழிலாளி ஆன்ந்த் யாதவை விடுவித்தனர். அவர்கள் இருவரும் நேற்று (பிப்.15) மாலை விடுதலையாகினர். இருவரும் தற்போது குட்ரு காவல் நிலையத்தில் பத்திரமாக உள்ளனர்.
நக்சலைட்டுகள் தங்கள் இருவரையும் விடுவிக்கும்போது அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல தலா ரூ.2000 கொடுத்ததாக போலீஸில் ஆனந்த் யாதவ் கூறினார். ஆனால், பொறியாளர் அசோக் பவார் இன்னும் தான் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் உள்ளார்.
இதற்கிடையில் வனத்துக்குள் சென்ற ஆனந்த் யாதவின் மனைவி சோனாலிக்கு கணவர் விடுவிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர் தனது கணவரைப் பார்க்கும் ஆவலில் உள்ளதாகக் கூறியுள்ளார். அவர் வனத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்.