பிஹு பண்டிகையை பீகாரில் கொண்டாடும் பண்டிகை என்று தவறாக கூறியதற்காக நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமமாலினி மன்னிப்பு கேட்டுள்ளார்.
தவறான தகவலுடன் ட்வீட்
பாரதிய ஜனதா கட்சி எம்.பி., ஹேமா மாலினி, பிஹு பண்டிகையை முன்னிட்டு சமூக ஊடகங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது இந்த சர்ச்சை தொடங்கியது. அறுவடைத் திருநாளில் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் போது, அஸ்ஸாமுக்குப் பதிலாக பீகாரில் "கொண்டாடப்படும்" பண்டிகை என, 'போஹாக் பிஹு'வைத் தவறாகக் குறிப்பிட்டதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிழை விரைவில் ட்விட்டர் பயனர்களின் கண்களில் சிக்கிய நிலையில், அவர் மீது விமர்சனங்களும் ட்ரோல்களும் எழத்துவங்கின. இணைய பயனர்களின் கோபத்தை எதிர்கொண்ட ஹேமமாலினி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிஹரில் பிஹுவா?
ஏப்ரல் 13 அன்று, ஹேமா மாலினி வெளியிட்ட ட்வீட் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதில், "இது இப்போது அறுவடை காலம். தமிழ் புத்தாண்டு, பைசாகி (பஞ்சாப்), பிஹு (பீகார்) மற்றும் பொஹெலா பைசாக் அல்லது நபா பர்ஷா (வங்காளம்) ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் அனைவருக்கும் அற்புதமான பண்டிகை மாத வாழ்த்துக்கள்" என்று எழுதியிருந்தார்.
அது அசாம் பண்டிகை
ட்விட்டர் பயனர்கள் ஹேமா மாலினிக்கு அறிவுரை வழங்கத் துவங்கினர். ஒருவர், பிஹு உண்மையில் எங்கு கொண்டாடப்படுகிறது என்று நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு மேடம், பிஹு அஸ்ஸாமைச் சேர்ந்த பண்டிகை, ஒரே இடத்தில் அதிகபட்ச குழு நடனக் கலைஞர்கள் என்ற கின்னஸ் உலக சாதனையை இன்று செய்துள்ளோம்" என்று எழுதினார்.
ட்ரோல்களும் மீம்களும்
ஹேமமாலினி செய்த இந்த சம்பவம் பற்றி பல மீம்களும் வெளிவந்தன. அப்போது பிஹாரில் கொண்டாடப்படும் சத் பூஜை அசாமிய பண்டிகையாக இருக்கும் என்றும் சிலர் கேலியாக கமெண்ட் செய்திருந்தனர். அரசியல்வாதிகள் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது இது முதன்முறை அல்ல. ஆனால் தான் செய்த பதிவு தவறு என்பதை உணர்ந்த அவர் அதனை டெலிட் செய்து மன்னிப்பு கேட்டதை பலர் பாராட்டியுள்ளனர்.