நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஐஐடி கான்பூர் பேராசிரியர் டாக்டர் மணிந்திர அகர்வால், மே மாதம் இரண்டாம் வாரத்தில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என கணித்துள்ளார். கணித மாதிரியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள் மே மாதத்தில் கிட்டத்தட்ட 50,000 முதல் 60,000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என கூறியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 11,109 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை 7,830 என பதிவான தினசரி தொற்று பாதிப்பு, நேற்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,622 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்புல் 0.11 சதவீதம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்க இரண்டு காரணங்கள் உண்டு என ஐஐடி-கான்பூர் பேராசிரியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 5% மக்களிடையே குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் பரவி வரும் xbb 1.16 மற்றும் ba2 வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது, இந்த இரண்டு காரணங்களால் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
90% மக்களிடையே கொரோனா வைரஸுக்கான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. "இந்த மாதிரியின்படி வரவிருக்கும் மாதங்களில் 50,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு இது பெரிய விஷயமல்ல" என்றும் டாக்டர் மணீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா வைரஸ் அறிகுறிகள் தீவிரமாக இல்லாமல் லேசானதாக இருக்கிறது. பெரும்பாலானோருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது, இதற்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனா வைரஸால் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.சி.எம்.ஆர் தரப்பில் சிகிச்சை வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிகுறிகள் மிகவும் குறைவாக இருந்தால் அதாவது லேசான காய்ச்சல் இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு ஆண்டிபயாடிக் பயன்படுத்தக்கூடாது. மூச்சுத்திணறல், சுவாச நோய் தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் கண்காணிக்கப்படவேண்டும். தேவைப்பட்டால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட உடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் அளவு 30 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.