இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி நெட்வொர்க், வரலாற்றில் முதன்முறையாக, மெட்டாவெர்ஸில் அடியெடுத்து வைப்பதன் மூலம் மெய்நிகர் உலகில் புதிய சாதனையை படைத்துள்ளது.


டெல்லியை தளமாகக் கொண்ட கிராஃபிட்டி நிறுவனத்துடன் இணைந்து, ஏபிபி மெட்டாவெர்ஸை அறிமுகப்படுத்தியதன் மூலம், மெய்நிகர் தொழில்நுட்ப உலகில் நுழைந்த முதல் இந்திய வெளியீட்டாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஏபிபி நெட்வொர்க்.


மூன்றாம் ஆண்டில் ABP நாடு:


ஏபிபி குழுமத்தின் தமிழ் வலைதளமான ஏபிபி நாடு, வெற்றிகரமாக 3-ம் ஆண்டில் நுழைந்த நிலையில், மெய்நிகர் தொழில்நுட்ப உலகில் ஏபிபி அடியெடுத்து வைக்கிறது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், பயனர்களுக்கு ஏபிபி நாடு மெட்டாவெர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது.


ஊடக உலகில் திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில் ஊடாடும் அனுபவத்தை வழங்குவதோடு, முற்றிலும் புதிய வழியில் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுடன் பயனர்களை இணைக்க உள்ளது.


ஏபிபி நாடு மெட்டாவெர்ஸுடன், ஏபிபி நெட்வொர்க் ஊடகத் துறையில் ஒரு முன்னோடியாக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. மெட்டாவெர்ஸ் என்பது ஒரு புதுமையான மெய்நிகர் உலகமாகும். செய்தி உள்ளடக்கத்தை வழங்குவது மட்டும் இன்றி ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடிவற்ற சாத்தியங்களையும் இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது.  


2022ஆம் ஆண்டில், உலகளாவிய மெட்டாவெர்ஸ் சந்தையின் மதிப்பு 51.69 பில்லியன் டாலர்களாக கணக்கிடப்பட்டது. 2030ஆம் ஆண்டில், இதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 44.5 சதவிகிதத்துடன் சந்தை மதிப்பு 1.3 டிரில்லியன் டாலர்கள் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய டிஜிட்டல் மீடியா உலகில் பரிணாம வளர்ச்சி:


ஏபிபி நாடு மெட்டாவெர்ஸ், ஒட்டுமொத்த ஏபிபி குழுமத்தின் மெட்டாவெர்ஸை வெளியிடுவதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் மீடியா உலகில், பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை படைக்க உள்ளது.


இந்தத் தொடக்கம் குறித்து ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே தெரிவிக்கையில், ”ஏபிபி நாடு மெட்டாவெர்ஸை தொடங்குவதில் உற்சாகத்தை உணர்கிறோம். டிஜிட்டல் மீடியாவின் எதிர்காலமாக மெட்டாவெர்ஸ் இருப்பதை உணர்ந்துள்ளோம். இந்த புதிய களத்தில் நுழையும் முதல் இந்திய செய்தி நிறுவனமாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். செய்தி நுகர்வில் ஏபிபி மெடாவெர்ஸ் ஒரு புதுப்புரட்சியைக் கொண்டுவரும் என நம்புகிறோம்” என்றார்


ஏபிபி நாடு மெட்டாவெர்ஸ் எனும் புதிய முயற்சி தொடர்பாக, ஏபிபி நாடு ஆசிரியர் ஷண்முகசுந்தரம் கூறியதாவது: தமிழ் மக்களுக்கு சர்வதேச அளவிலான புதிய அனுபவத்தை ABP நாடு மெட்டாவெர்ஸ் அளிக்கும். ABP நாடுவின் துணிச்சலான செய்தி முறை மூலம் தமிழ்ஊடகத் துறையில் புதிய அவதாரத்தைத் தொடங்க உள்ளோம். எப்போதும்போல ABP-ன் உண்மையான, துணிச்சலான இதழியல், இந்த புதிய பயணத்துக்கான அடிநாதமாக இருக்கும். செய்தி நுகர்வின் அடுத்தக்கட்டத்துக்கு மக்களை எடுத்துச் செல்லும் எனத் தெரிவித்தார்.


செய்தி நுகர்வில் புதிய அனுபவத்தைத் தரும் ABP NADU Metaverse:


இது தொடர்பாக கிராஃபிட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் பியூஷ் அகர்வால் பேசுகையில், “திருப்புமுனையை ஏற்படுத்த உள்ள ஏபிபி நாடு மெட்டாவெர்ஸ் முயற்சியில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிஜிட்டல் தளத்தில் செய்திகள் வழங்கும் முறையில் எங்களின் புதிய முயற்சியை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறோம். இது, பயனர்கள் செய்திகளை எடுத்து கொள்ளும் விதத்தை எதிர்காலத்தில் மறுவரையறை செய்யும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.


வசீகரிக்கும் ஊடாடும் தன்மையுடன் செய்திகளை உயிர்ப்பிக்கும் தளமாக ஏபிபி மெட்டாவெர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. செய்தி அறை, விளையாட்டு அரங்கம், நேர்காணல் அறை, செல்ஃபி பகுதி போன்ற பல மெய்நிகர் உலகங்களை ஏபிபி நாடு மெட்டாவெர்ஸ் கொண்டுள்ளது.


ஏபிபி ஊடகக் குழும பிரம்மாண்டத்தின் நுழைவாயில் அனுபவமாக ஏபிபி நாடு மெட்டாவெர்ஸ் இருக்க போகிறது. மேலும் மெய்நிகர் உலகம் உறுதியளிக்கும் அற்புதமான புதிய சாத்தியக்கூறுகளைப் பார்வையாளர்களுக்கு வழங்கும். 
டிஜிட்டல் வடிவில் பயனர்கள் ஏபிபி நாடு மெட்டாவெர்ஸில் அடியெடுத்து வைக்க முடியும்.


அதில், சமீபத்திய மற்றும் பிரபலமான செய்திக் கட்டுரைகளைப் படிக்கலாம். ஏபிபி நாடு வீடியோக்களைப் பார்க்கலாம். வேடிக்கையான செயல்கள் மூலம் பிற பயனர்களுடன் தொடர்பு கொள்ளலாம். கேம்களை விளையாடலாம். தங்களின் டிஜிட்டல் அவதாரத்துடன் செல்ஃபி எடுத்து கொள்ளலாம். அதை, சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம். 


ஏபிபி நாடு மெட்டாவெர்ஸின் துவக்கம், மெட்டாவெர்ஸில் ஏபிபி ஊடக பயணத்தின் தொடக்கமாகும். வரும் மாதங்களில் கூடுதல் அம்சங்களையும் உள்ளடக்கத்தையும் வெளியிட ஏபிபி குழுமம் திட்டமிட்டுள்ளது. இது பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும். டிஜிட்டல் மீடியா இடத்தில் முன்னணியில் இருக்கும் ஏபிபி நெட்வொர்க்கின் நிலையை உறுதிப்படுத்தும்.


ஏபிபி நாடு மெட்டாவெர்ஸ், இப்போது நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. ஏபிபி நாடு மற்றும் பிற ஏபிபி நெட்வொர்க் வலைதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் (Google Play மற்றும் App Store இல் இலவசமாகக் கிடைக்கிறது) வழியாக ஏபிபி நாடு மெட்டாவெர்ஸை அனுபவிக்கலாம்.


ஏபிபி நெட்வொர்க் பற்றி:


புதுமையான ஊடகமாக உள்ள ஏபிபி, உள்ளடக்கத்தை உருவாக்கும் நிறுவனமாகும். ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் துறையில் நம்பகத்தன்மை வாய்ந்த குரலாக உள்ளது ஏபிபி நெட்வொர்க். பல மொழி செய்தி சேனல்கள் வழியாக இந்தியாவில் தினமும் 535 மில்லியன் நபர்களை சென்றடைகிறது.


புதுமையான உள்ளடக்கத்தை வழங்கும் ஏபிபி ஸ்டுடியோஸ், ஏபிபி கிரியேஷன்ஸ் கீழ் வருகிறது. செய்திகளை தவிர்த்து அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய உண்மையான உள்ளடக்கத்தை உருவாக்கி, அதை தயாரித்து உரிமத்துடன் வெளியிடுகிறது ஏபிபி கிரியேஷன்ஸ். ஏபிபி நெட்வொர்க் என்பது ஏபிபி குடும்பத்தில் ஒரு குழுமம் ஆகும். இது  ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, முன்னணி ஊடக நிறுவனமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.