ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 5 மணி நிலவரப்படி 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


அம்பாலா மாவட்டத்தில் 62.26 சதவிகித வாக்குகளும் பிவானி மாவட்டத்தில் 63.06 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மெவாட்டில் 68.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக குர்கானில் 49.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


ஹரியானாவில் வெற்றி யாருக்கு?


ஹரியானாவில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து, வரும் அக்டோபர் 8ஆம் தேதி, ஹரியானா தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. 


கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


 






இந்த சூழலில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்கு செலுத்த மக்கள் ஆர்வம் காட்டினர். குறிப்பாக, கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நகர்ப்புறங்களை பொறுத்தவரை, வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. அது வாக்கு சதவீதத்திலும் எதிரொலித்தது.


ஆட்சியை பிடிக்கும் நோக்கில் இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சை, பெண்களுக்கு நிதியுதவி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்பட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.


அதேபோல, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றை தேர்தல் களத்தில் எழுப்பு காங்கிரஸ் வாக்கு சேகரித்தது. இதை தவிர, முன்னாள் பாஜக எம்பியும் முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் நடத்திய வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது காங்கிரஸ்.


இதையும் படிக்க: TVK Vijay Politics: அண்ணன் ரெடி..! தமிழகத்தின் ”கோட்” ஆவாரா விஜய்? தவெக அரசியல் மாற்றத்தை நிகழ்த்துமா? எதிரி யார்?