பாரதத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். சுற்றுலா மற்றும் வளர்ச்சியில் இந்தப் பிராந்தியத்தின் ஆற்றலை ஊடகங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


டெல்லியில் இன்று பிரதிதின் மீடியா நெட்வொர்க் ஏற்பாடு செய்திருந்த 'கான்க்ளேவ் 2024' நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், அரசின் "கிழக்கு நோக்கிய கொள்கை" மாற்றத்தக்க தாக்கத்தையும், தேசிய கதையாடல்களை வடிவமைப்பதில் ஊடகங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.


குடியரசுத் துணைத் தலைவர் பேசியது என்ன?


"விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. நீர்வழிகள் இருபது மடங்கு விரிவடைந்துள்ளன. இது நாடு முழுவதும் மகத்தான ஆர்வத்தையும் முதலீட்டையும் தூண்டியுள்ளது" என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் பதினோரு செம்மொழிகளில் ஐந்தில் ஒன்றாக பெங்காலி, மராத்தி, பாலி மற்றும் பிராகிருத மொழிகளுடன் அசாமிய மொழியும் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டதை தன்கர் எடுத்துரைத்தார்.


வடகிழக்கு மாநில மக்களின் துடிப்பான கலாச்சாரம், நேர்த்தியான உணவு வகைகள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை தன்கர் புகழ்ந்து பேசினார். "அங்கு அனுபவித்த கலாச்சார விழாவை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பாரதத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன" என்று அவர் குறிப்பிட்டார்.


இந்திய அரசின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு வரும் சின்னமான அங்கோர் வாட் ஆலயம் உள்ள வடகிழக்குப் பகுதியிலிருந்து கம்போடியாவுக்கு விரைவில் பயணிக்க உதவும் வகையில் வளர்ந்து வரும் இணைப்பை அவர் சுட்டிக் காட்டினார்.


"வளர்ச்சிக்கான தூதர்களாக ஊடகங்கள் செயல்பட வேண்டும்"


தேச நிர்மாணத்தில் ஊடகங்களின் பங்கை வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர் தன்கர், வடகிழக்குப் பகுதியின் சுற்றுலாத் திறனை மேம்படுத்தி, வளர்ச்சிக்கான தூதர்களாக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதிலும், மனதை உற்சாகப்படுத்துவதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் செய்திகள் வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த கருவிகளாக செயல்பட முடியும். எங்கள் மாறுபட்ட பிராந்தியங்களில் உள்ள தனித்துவமான வாய்ப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.


நம் தாயையும் நமது நிறுவனங்களையும் நாம் சேதப்படுத்த முடியாது. அவற்றை நாம் வளர்க்க வேண்டும். ஊடகங்கள் உட்பட அதன் ஒவ்வொரு நிறுவனமும் உகந்ததாக செயல்படும்போது ஜனநாயகம் வளர்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.


தவறான தகவல்கள், பரபரப்பான செய்திகள், தேச விரோத கதையாடல் ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்கள் குறித்து கவலை தெரிவித்த தன்கர், இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தை ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.