TVK Vijay Politics: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.


விஜயின் அரசியல் எண்ட்ரீ:


நடிகர் விஜய் எனும் பெயர் தமிழ் திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, நன்கு பரிட்சையமானது. விஜயை திரையில் கண்டாலே போதும் என லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை கொடுத்து, உச்சநட்சத்திரமான விஜயின் கால்ஷீட்டை பெற தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். இப்படி தமிழ் திரையுலகின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சூழலில் தான், அதனை விட்டு முழுவதுமாக விலகி தனது அரசியல் பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகம்:


ஆண்டின் தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு எனவும் விஜய் அறிவித்தார். அடுத்தடுத்து கட்சிக் கொடி, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இந்நிலையில் தான், வரும் 27ம் தேதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


ஆரம்பமே சர்ச்சைகள்:


முழுநேர அரசியலில் இன்னும் களமிறங்காத சூழலிலும், கட்சி பெயரை அறிவித்தது முதலே விஜய் பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிரார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில், ஒற்றுப் பிழை இருக்க “முதல் கோணல் முற்றும் கோணல்” என விமர்சனங்கள் குவிய தொடங்கின. ஆனால், அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு ”தமிழக வெற்றிக் கழகம்” என கட்சியின் பெயரை திருத்தினார். அக்கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த சுருக்கப் பெயர் தங்களுக்கே சொந்தம் என, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சண்டைக்கு வந்தது. அதோடு, கட்சி கொடியில் யானை சின்னம் பொறிக்கப்பட, அந்த சின்னம் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது என பகுஜன் சமாஜ் கட்சி களத்தில் குதித்தது. இதுபோக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது, பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியது என, விஜயின் ஒவ்வொரு செயலும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன.


தாக்கத்தை ஏற்படுத்துவாரா விஜய்?


இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டவர் யார் என கேட்டால், அதற்கு பதில் விஜய் என்பதில் எந்த மாற்றக் கருத்தும் இல்லை. குறிப்பாக பெரும் இளைஞர் பட்டாளம் அவர் பின் திரள தயாராக உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் விஜயின் நற்பணி மன்றம் அமைந்திருக்கிறது. தாய்மார்களுக்கு மத்தியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த சூழல் என்பது அவரை நடிகராக பார்க்கும்போது மட்டுமே. இந்த ரசிகர் கூட்டம் அப்படியே விஜயின் வாக்கு வங்கியாக மாறுமா என்பது சந்தேகமே. பல கட்சிகளை சேர்ந்தவர்களும் விஜயின் ரசிகர்களாக இருக்கின்றனர். எனவே விஜயே அரசியல் தலைவராக உருவெடுக்கும்போது, அவரது ரசிகர் பட்டாளம் பல பிரிவுகளாக உடைய அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றை எதிர்பார்க்கும் நபர்கள், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை வழங்கலாம். அதோடு, ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் இன்னும் அப்படியே இருக்கத்தான் செய்கிறது என்பதால், விஜய்க்கும் தமிழக அரசியலில் ஒரு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை.


அரசியல் எதிரி: விஜய் Vs திமுக


பல்வேறு அரசியல் கட்சி தரப்பினரிடமிருந்தும், விஜய்க்கு எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால், அவர் தனது அரசியல் எதிரியாக ஆளும் திமுகவை தான் கருதுகிறார் என்பது அவரது நடவடிக்கைகள் மூலமே தெரிகிறது. உதாரணமாக, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார். ஆனால், திமுகவிற்கு அந்த கட்சி வேட்பாளர்களுக்கு வாழ்த்து கூறவில்லை. திமுக காலம் காலமாக சமூகநீதி மற்றும் சமத்துவம் என முழங்கி வர, அதே கருத்தை உணர்த்தும் விதமாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற மாற்று முழக்கத்தை விஜய் முன்னெடுத்துள்ளார். அவர் தான் இனி தங்களது எதிர்கால எதிரி என்பதை உணர்ந்ததன் விளைவாகவோ என்னவோ, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களை விட திமுகவினர் தீவிரமாக விஜயை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தி கோட் பட ரிலீசின் போது சமூக வலைதளத்தில் திமுக ஐடி விங்கின் செயல்பாடும் இதனை உணர்த்தியது. எனவே, 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் என்பது, உதயநிதி Vs விஜய் என்ற கள மோதலுக்கு தயாராகி வருவதாகவே தெரிகிறது.


ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சிகள்:


திமுகவிற்கும், விஜய்க்கும் நேரடி போட்டி என்பதை களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, கடவுள் மறுப்பு போன்ற நடவடிக்கைகளால் பாஜகவும் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமயாக விமர்சித்து வருகிறது. அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள விசிக ஆகியவை விஜயால் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றன. அதோடு, காங்கிரஸ் கட்சியினரும் தவெகவை பெரிதாக விமர்சிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விஜய்க்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார். இப்படி சில கட்சிகள் நேரடியாகவும், சில கட்சிகள் மறைமுகமாகவும் விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. இதனால், வலுவான கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் விஜய்க்கு உள்ளது.


விஜயின் வெற்றிக்கு தேவையானது என்ன?


விஜயின் முதல் இலக்கு என்பதே இளைஞர்களாக தான் உள்ளனர். அதற்கு உதாரணமாக தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசளித்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. மேலும்,  தமிழக அரசியல் களம் என்பது ஒரு தலைவரை சுற்றி கட்டமைக்ப்படுவது தொடர்கதையாக உள்ளது. அரைநூற்றாண்டு காலமாக, திமுக மற்றும் அதிமுக அப்படி தான் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இரண்டு கட்சிகளுக்கும் மாற்றை தேடினாலும், அந்த கட்சிகளில் இருந்த தலைமைகளுக்கு நிகரான தலைவர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை. ஆனால், விஜய் நம்பகமானவர், நன்கு பரிட்சயமானவர், தமிழக குடும்பங்களில் ஒருவராக பெரும்பாலான குடும்பங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருக்கிறார்.


திமுகவிலும் அடுத்த தலைமுறைக்கான தலைவராக உதயநிதி கை ஓங்கி வருகிறது. இந்த சூழலில் தான், தமிழகம் எதிர்பார்க்கும் ஒரு தலைமையாக விஜய் தன்னை முன்னெடுத்து வருகிறார். சரியான திட்டமிடல் மற்றும் வலுவான களப்பணியை முன்னெடுத்தால் விஜயால் சாதிக்க முடியும் என்பதே உண்மை. அதேநேரம், 50 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும், திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்துவது விஜய்க்கு அவ்வளவு எளிதான காரியமாக நிச்சயமாக இருக்கப்போவதில்லை. அப்படி நிகழ்த்தினால், தமிழக அரசியல் வரலாற்றில் விஜய் என்றும் ”தி கோட்” ஆக கொண்டாடப்படுவார் என்பதே உண்மை.