Savitri Jindal: ஹரியானா தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 8 தலைவர்களை, பாஜக கட்சியில் இருந்து நீக்கியது குற்ப்பிடத்தக்கது.
சாவித்ரி ஜிண்டால் பாஜகவில் இருந்து நீக்கம்:
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டதற்காக, இந்தியாவின் 'பணக்காரப் பெண்' ஆன சாவித்ரி ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது. சாவித்ரி உட்பட 4 பேர் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜிண்டால் 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், ஹிசார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவால் இடைநீக்கம் செய்யப்பட்ட மற்ற மூன்று தலைவர்களில் கௌதம் சர்தானா, தருண் ஜெயின் மற்றும் அமித் குரோவர் ஆகியோர் அடங்குவர். அவர்களும் ஹிசார் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்களாவர்.
யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?
சாவித்ரி ஜிண்டால் பாஜகவின் குருஷேத்ரா தொகுதி எம்.பி., நவீன் ஜிண்டாலின் தாயார் மற்றும் மறைந்த தொழிலதிபர் ஓபி ஜிண்டாலின் மனைவி ஆவார். அவர் ஹரியானா அமைச்சரும், ஹிசார் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவுமான கமல் குப்தாவை எதிர்த்து தேர்தலில் களமிறங்கியுள்ளார். ஹிசார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்காததால் ஜிண்டால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.3.65 லட்சம் கோடி என கூறப்படுகிறது.
கட்சி நடவடிக்கை பற்றி தெரியாது?
இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த நடவடிக்கை குறித்து தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார். அதன்படி, ”நான் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். ஹிசார் குடும்பத்தினருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். கட்சியிலிருந்து நீக்கியது பற்றி இப்போதே பேச மாட்டேன். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. பாஜகவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் எதுவும் கேட்கப்படவில்லை. எனக்கு ஏதாவது தெரிந்தால் சொல்கிறேன்” என செய்தியாளர்களின் கேள்விக்கு சாவித்ரி ஜிண்டால் பதிலளித்துள்ளார்.
பாஜக உட்கட்சி பூசல்:
ஹரியானாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்த மாநில பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. வாய்ப்பு வழங்கப்படாத பல முன்னணி தலைவர்களும், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே வேட்புமனுதாக்கல் செய்தனர். அந்த வகையில், செப்டம்பர் 29ஆம் தேதி, கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் ஹரியானா பாஜக தலைவர்கள் 8 பேர் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சவுதாலா, முன்னாள் எம்எல்ஏ தேவேந்திர காத்யன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது, சாவித்ரி ஜிண்டாலும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.