பல வகையான தோல் நிறங்களில் 'பேண்ட்-எய்ட்'கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படத்தைப் பகிர்ந்து அதன் அவசியத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளார் ஹர்ஷ் கோயங்கா.


பல வண்ணங்களில் பேண்ட்-எய்ட்கள்


சிறிய காயங்களுக்கு மருந்தாக அல்லது செப்டிக் ஆகாமல் பாதுகாக்க, மக்கள் பெரும்பாலும் ஒட்டும் பிளாஸ்டர் பேண்ட்-எய்டுகள் பயன்படுத்துகின்றனர். இது பலரால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ளது. பல ஆண்டு காலமாக அது ஏன் அந்த நிறத்தில் தயாரிக்கப்படுகின்றது என்ற யோசனையே பல பேருக்கு வந்திருக்காது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பு அதனை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதன் பயன்பாடு மக்கள் மத்தியில் தங்கள் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்றும், பிரிவினை ஏற்படுத்தும் என்றும் பலர் கோயங்காவின் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஹர்ஷ் கோயங்கா பதிவு


தற்போது ஹர்ஷ் கோயங்கா இந்த பிசின் பேண்டேஜ் குறித்து வெளியிட்டுள்ள பதிவு ட்விட்டரில் ஒரு அலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது ட்வீட்டில், பல்வேறு தோல் நிறங்களில் பேண்ட்-எய்ட்ஸ் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்தைப் பகிர்ந்து, மேலும் இது "அர்த்தமற்ற கண்டுபிடிப்புகளில்" ஒன்றாகும் என்று எழுதியுள்ளார். "தோல் நிறங்களை இதோடு பொருத்த வேண்டியது மிகவும் அவசியமா… சில கண்டுபிடிப்புகள் அர்த்தமுள்ளதாக இருப்பதில்லை!" என்று படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: S. M. Nasar: அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. கடுப்பான முதலமைச்சர் ஸ்டாலின்..நாசர் அமைச்சர் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா?


வைரலான பதிவு


வெவ்வேறு தோல் நிறத்தில் உள்ள மூன்று பேர் பேண்ட்-எய்ட் தங்கள் நிறத்துடன் பொருத்திப் பார்ப்பதை படம் காட்டுகிறது. இந்த பதிவு மே 9 அன்று பகிரப்பட்டுள்ளது. பதிவிடப்பட்டதிலிருந்து, இது 38,000 க்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்துள்ளது. அதோடு, இந்த ட்வீட் சுமார் 400 லைக்குகளை குவித்துள்ளது. இது அவசியமற்ற ஒரு தயாரிப்பு என்று சிலர் பகிர்ந்து கொண்டாலும், மற்ற சிலர் ஹர்ஷ் கோயங்காவின் கருத்துகளுடன் அவ்வளவாக உடன்படவில்லை.






மக்கள் கருத்து


“உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். வெள்ளை நிற சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்பு அவர்களுக்கு அணிந்துகொள்ள நன்றாக இருக்கும். சில மாநிற தோல் கொண்ட மக்கள் தங்கள் சொந்த நிறத்தோடு பொருத்த விரும்புவார்கள்”என்று ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ளார். "நீங்கள் காயப்பட்ட இடத்தை செப்டிக் ஆகாமல் தடுப்பதற்காகவும், மருத்துவ காரணங்களுக்காகவும் பேண்ட்-எய்டை பயன்படுத்துகிறீர்கள், அதிலென்ன பேஷன் கேட்கிறது," என்று மற்றொருவர் பகிர்ந்து கொண்டார். "தோல் நிறத்தோடு பொருத்துவது உதட்டுச்சாயம் வியாபாரத்திற்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம் ஆனால் பேண்ட்-எய்டுக்கு அவசியமில்லை!!" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்திருந்தார்.


"இது உண்மையில் எல்லா நிற மக்களுக்கும் நிறைய பயனுள்ளதாக இருக்கும். எனவே தயவு செய்து ஆழமான புரிதல் இல்லாமல் பேசாதீர்கள். மக்கள் தங்கள் தோலின் நிறத்தால் மட்டும் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது, இது பிரிவினையை உண்டாக்காது, ஒரே நபருடைய தோல் கூட உடலின் பல இடங்களில் நிறம் மாறக்கூடும்” என்று மற்றொரு நபர் கருத்து கூறினார்.