கர்நாடகவில் ஒரே கட்டமாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு ஆட்சியை பிடிப்பதற்கு தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடக தேர்தல்:
தென்னிந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் ஒரே மாநிலமான கர்நாடகாவில், அவர்களது பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அங்குள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என கடந்த மார்ச் மாத இறுதியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் ஆளும் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே, கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக ஒரு மாத காலமாக நடைபெற்ற சுறாவளி பரப்புரை, கடந்த திங்கட்கிழமை மாலை நிறைவுற்றது.
2,615 வேட்பாளர்கள்:
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், முதல்முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவு:
இந்த நிலையில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடையை ஆற்றி வருகின்றனர். மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த வாக்குப்பதிவில் வாக்களிக்க, 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி பெற்று உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் அடங்குவர். இதில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 பேர் இளம் வாக்காளர்கள், 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேர் ஆவர்.
நீலகிரியில் விடுமுறை:
கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பணியற்றும் அம்மாநில தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 100% வாக்கு பதிவை உறுதி செய்யும் விதமாக நீலகிரி மாவட்ட தொழிலாளர் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகள்:
கர்நாடக மக்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக வாக்குச்சாவடிகள் சாய் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் சுமார் 4 லட்சம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 75 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு இயந்திரங்களும், 70 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டு இயதிரங்களும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்கான 76 ஆயிரத்து 202 இயதிரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
பலத்த பாதுகாப்பு:
வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியாக நடத்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளிலும் பலத்த பதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும், வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.