வாடியா குழுமத்திற்குச் சொந்தமான Go First விமான சேவையை நிறுத்தப்போவதாகவும், திவால்நிலைத் தீர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இனி நிதிக் கடமைகளைத் தொடர முடியாது என்றும், கூறியுள்ளது. அமெரிக்க நிறுவனமான பிராட் & விட்னியிடம் வாங்கிய பழுதடைந்த என்ஜின்கள் காரணமாக 50% இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விமான சேவை மூன்று நாட்கள் நிறுத்தம்
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) தன்னார்வ திவால் தீர்மான நடவடிக்கைகளுக்காக விமான நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி கௌசிக் கோனா தெரிவித்தார். இதனையொட்டி, மே 3 முதல் மே 5 வரை மூன்று நாட்களுக்கு அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக அந்த ஏர்லைன்ஸ் அறிவித்தது. மூன்று நாட்களுக்கு விமானங்களை ரத்து செய்ய 'கோ ஃபர்ஸ்ட்' முடிவு செய்ததை அடுத்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ விமான நிறுவனத்திற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைச் சமர்ப்பிக்கவும், மே 5, 2023 முதல் அங்கீகரிக்கப்பட்ட அட்டவணையின்படி விமானங்களை இயக்குவதற்கான செயல் திட்டத்தைச் சமர்ப்பிக்கவும் விமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஒரு அறிக்கையில், "Go First விமான சேவை, இன்ஜின்கள் தொடர்பான முக்கியமான விநியோகச் சங்கிலி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கம் விமான நிறுவனத்திற்கு எல்லா வழிகளிலும் உதவி செய்து வருகிறது. சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமும் இந்த பிரச்சினை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டுத் தடையானது விமான நிறுவனத்தின் நிதி நிலைக்கு அடியை ஏற்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. விமான நிறுவனம் NCLT க்கு விண்ணப்பித்துள்ளது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. நீதித்துறை செயல்முறை அதன் போக்கில் இயங்கும் வரை காத்திருப்பது விவேகமானது, "என்று குறிப்பிட்டுள்ளார்.
கோ ஃபர்ஸ்ட் அறிக்கை
சில நாட்களுக்கு முன்பு Go First நிறுவனத்தின் உரிமையாளரான இந்தியாவின் வர்த்தக குழுமமான வாடியா குழுமம், நிறுவனத்தின் பெரும் பகுதியையோ அல்லது மொத்தமாகவோ விற்பனை செய்து விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், திவால்நிலைத் தாக்கல் குறித்து, விமான நிறுவனம் ஒரு அறிக்கையில், "Pratt & Whitney's International Aero Engines, LLC ஆல் வழங்கப்பட்ட ஃபெயிலியர் என்ஜின்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், Go First இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது. மே 1, 2023 நிலவரப்படி 25 விமானங்கள் (அதன் ஏர்பஸ் ஏ320நியோ விமானப் படையில் தோராயமாக 50%க்கு சமம்) பிராட் & விட்னியின் பழுதடைந்த என்ஜின்களால் பாதியில் தரையிறக்கப்பட்ட விமானங்களின் சதவீதம் டிசம்பர் 2019 இல் 7% ஆக இருந்து, டிசம்பர் 2020 இல் 31% ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் 2022 இல் இது 650% தொட்டது. பிராட் & விட்னி பல ஆண்டுகளாக தொடர்ந்து பல உறுதிமொழிகளை அளித்தாலும், அவற்றை இதுவரை காப்பாற்றவில்லை," என்று கூறியுள்ளது.
நல்ல இன்ஜின்கள் வழங்க வேண்டும்
பிராட் & விட்னி அவசரகால நடுவர் தீர்ப்பில் உள்ள உத்தரவுகளுக்கு இணங்கினால், ஆகஸ்ட்/செப்டம்பர் 2023க்குள் விமான நிறுவனங்கள் முழு செயல்பாடுகளுக்கு திரும்ப முடியும் என்றும் அது கூறியது. "NCLTக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலைக்கு Go First ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. ப்ராட் & விட்னி, உதிரி குத்தகை என்ஜின்களை வழங்குவதன் மூலம் அவசரகால நடுவர் தீர்ப்பில் உள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறியது," என்று நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
ராய்ட்டர்ஸ் ஆதாரங்களின்படி, விமான நிறுவனங்களுக்கு கடன் வழங்குபவர்களுக்கு திவால் தாக்கல் பற்றி தெரியாது என்று கூறப்படுகிறது. விமான நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கை குறித்து அவர்கள் சந்தித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிராட் & விட்னி இன்ஜின்களில் இருந்து சரியான இன்ஜின்கள் வழங்கப்படாததால், அதன் விமானப் படையில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் பழுதாகி தரையிறங்கியுள்ளதால், விமான நிறுவனத்தின் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.