மோசடி


ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர்.


பல விதிமான மோசடிகள் ஆன்லைன் நடைபெற்று வருகின்றன. ஜி-பே, மின் கட்டணம், பரி பொருட்கள் வந்துள்ளதாக கூறுதல் உள்ளிட்ட பல யுக்திகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் ஆன்லைனில் பண மோசடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆன்லைன் பணமோசடி தொடர்பாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


ஆய்வில் அதிர்ச்சி


அதன்படி, டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான லோக்கல் சர்க்கிள்ஸ் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் மக்கள் ஆன்லைன் பணமோசடி குறித்து கருத்து தெரிவித்தனர். இந்தியாவில் 331 மாவட்டங்களில் 66 சதவீத ஆண்களும், 34 சதவீத பெண்களும் என மொத்தம் 32 ஆயிரம் குடும்பத்தினர் இந்த கருத்துக்கணிப்புக்கு பதிலளித்துள்ளனர். அதில் 26 சதவீதம் பேர் கிராமப்புற  பகுதிகளை சேர்ந்தவர்கள். இந்நிலையில், லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தி கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.


39 சதவீத குடும்பங்கள் 


அதில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 39 சதவீத குடும்பங்கள் ஆன்லைன் பணசோசடியை சந்தித்துள்ளனர். அவர்களில் 24 சதவீதம் பேர் மட்டுமே இழந்த பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.  மேலும், கருத்துக்கணிப்புக்கு பதிலளித்தவர்களில் 23 சதவீத பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மோசடியை சந்தித்துள்ளனர். அதேபோல இணையத்தில் வெளியாகும் பல விளம்பரங்களை பார்த்து பணத்தை செலுத்தி, பொருட்கள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது 13 சதவீதம் பேர் என்று ஆய்வில் தெரியவந்தது. 


இதனை அடுத்து, 10 சதவீதம் பேர் ஏடிஎம் கார்டு மோசடியும், 10 சதவீதம் பேர் வங்கி கணக்கு மோசடியும், 16 சதவீதம் பேர் பிற வகையான மோசடிகளை சந்தித்துள்ளனர். மேலும், ஆன்லைன் பணமோசடியில் இருந்து 57 சதவீத குடும்பத்தினர் தப்பி உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டை விட குறைவு


மேலும், 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் ஆன்லைன் பணமோசடி புகார்கள் 2023ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. ஆனால் டெபிட், கிரெடிட் கார்டு மோசடிகள் கடந்த ஆண்டில் 18 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. 


பணமோசடியில் பணத்தை இழந்து திரும்பப் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு 17 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 24 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.