அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண சட்டப்பேரவையில் இந்துக்களுக்கு எதிரான இந்துபோபியாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுத்த முதல் அமெரிக்க மாகாணம் ஜார்ஜியாவாகும்.


இந்துக்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு:


இந்துபோபியா என்றால் இந்துக்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம். இதை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "100க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 பில்லியனுக்கும் அதிகமானோர் இந்து மதத்தை பின்பற்றி வருகின்றனர். இது, உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான மதங்களில் ஒன்றாகும். 


பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கிய இந்து மதம், அமைதி, ஏற்றுக்கொள்ளுதல், பரஸ்பர மரியாதையை வலியுறுத்துகிறது. மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல், நிதி, கல்வித்துறை, உற்பத்தி, எரிசக்தி, சில்லறை வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் அமெரிக்க-இந்து சமூகம் மிக பெரிய அளவில் பங்களித்துள்ளனர்.


யோகா, ஆயுர்வேதம், தியானம், உணவு, இசை, கலைகள் ஆகியவற்றுக்கு அமெரிக்க - இந்து சமூகம் ஆற்றிய பங்களிப்பு கலாச்சார கட்டமைப்பை வளப்படுத்தியது. அமெரிக்க சமூகத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு லட்ச கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க இந்து சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்து மதத்தை சிதைப்பதை ஆதரித்து, அதன் புனித நூல்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை வன்முறை மற்றும் ஒடுக்குமுறை என்று குற்றம் சாட்டும் கல்வித்துறையில் உள்ள சிலரால் இந்துபோபியா தீவிரமடைந்து நிறுவனமயமாக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்துபோபியாவுக்கு எதிராக தீர்மானம்:


அட்லாண்டாவின் புறநகரில் உள்ள ஃபோர்சைத் கவுண்டி பிரதிநிதிகள் லாரன் மெக்டொனால்ட் மற்றும் டாட் ஜோன்ஸ் ஆகியோரால் இந்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்துக்களும் இந்திய அமெரிக்கர்களும் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதியாக அட்லாண்டா உள்ளது.


இந்துபோபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வட அமெரிக்க இந்துக்கள் கூட்டணியின் அட்லாண்டா சாப்டர் அமைப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இந்த அமைப்பின் சார்பாக, கடந்த மார்ச் 22ஆம் தேதி, முதல் இந்துக்கள் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து இந்துக்கள் கூட்டணியின் அட்லாண்டா சாப்டர் அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் மேனன், "இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு வழிகாட்டிய ரெப் மெக்டொனால்ட், ரெப் ஜோன்ஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றியது கெளரவமாக உள்ளது" என்றார்.


மேலும் படிக்க: PBKS vs KKR, IPL 2023 LIVE: பஞ்பாப் அணிக்கு எதிரான கொகத்தாவின் ஆதிக்கம் தொடருமா? டாஸ் வென்று பந்து வீச முடிவு..!