பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங். அந்த மாநிலத்தில் நடப்பாண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். இந்த நிலையில், அம்ரீந்தர் சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.






முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலமாக இருந்தவர் கேப்டன் அம்ரீந்தர்சிங். கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்து வந்த அம்ரீந்தர்சிங், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக 2002ம் ஆண்டு முதன்முறையாக பதவியேற்றார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பதவியும் உயர்ந்த அம்ரீந்தர்சிங், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மூலம் மீண்டும் முதல்வரானார்.


இந்த நிலையில், அவருக்கும் நவ்ஜோத் சித்துவுக்கும் பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட மோதல் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், காங்கிரசில் இருந்தும் விலகினார். இதையடுத்து, பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். ஆனால், சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த அம்ரீந்தர்சிங் படுதோல்வி அடைந்தார். இந்த நிலையில்தான் அவர் பா.ஜ.க.வில் இன்று இணைந்தார்.




அம்ரீந்தர்சிங் பா.ஜ,க.வில் இணைந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், கிரண் ரிஜ்ஜூ, பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் அஸ்வனி ஷர்மா ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜ.க.வில் அம்ரீந்தர்சிங் இணைந்தது மட்டுமின்றி, தன்னுடைய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பா.ஜ.க.வுடன் இணைத்தார். பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது முதல் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க. தலைவர்களை அம்ரீந்தர்சிங் நேரில் சந்தித்து பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வில் இன்று இணையும் முன்புகூட டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து பேசினார்.


மேலும் படிக்க : கன்னித்தன்மையை நிரூபிக்கும் கட்டாயத்தில் ராஜஸ்தான் பெண்! மாப்பிள்ளை வீட்டார் அட்டூழியம் - நடந்தது என்ன?


மேலும் படிக்க : CCTV Cameras : அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்: யுஜிசி உத்தரவு.. பின்னணி என்ன?