விண்வெளியில் மனிதன் வசிக்க சாத்தியக் கூறுகளை அறியும் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க. அதேவேளையில் இன்னொருபுறம் பெண்கள் கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தங்களும் நடந்து கொண்டிருக்கிறது. 


அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது மாமியார் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்டார். காரணம் அந்தப் பெண் அவரது கன்னித்தன்மையை நிரூபிக்கத் தவறிவிட்டார். திருமணத்தன்று முதலிரவின் போது படுக்கையில் வெள்ளைத்துணி விரிக்கப்படும். அந்தத் துணியில் உறவின்போது பெண்ணின் கன்னித்திரை கிழிந்து ரத்தம் கசியும். அந்த ரத்தக் கறை படுக்கையில் விரிக்கப்பட்ட வெள்ளைத் துணியில் படிய அதைப் பார்த்து மாப்பிள்ளை வீட்டார் கவுரவம் கொள்வர். இந்த நடைமுறை மத்தியப் பிரதேசத்தின் சான்சி பழங்குடியின சமூகத்தில் இந்தப் பழக்கம் உள்ளது. இந்நிலையில் தான் சான்சி பழங்குடியின திருமணம் ஒன்று அண்மையில் சர்ச்சைக்குள்ளானது. 


நடந்தது என்ன?


24 வயதான பெண்ணுக்கு ஆணுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் முதலிரவில் கன்னித்திரை கிழியவில்லை. இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் சண்டையிட்டனர். ஊர் பஞ்சாயத்திற்கு விஷயம் சென்றது. பஞ்சாயத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக பெண் வீட்டாருக்கு விதிக்கப்பட்டது. அந்தப் பெண் வீட்டார் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர். மணப்பெண் தன்னை ஒருவர் ஓராண்டுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்து போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். இந்த சம்பவத்தை அறிந்திருந்தும் மணமகன் வீட்டார் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


வீடியோ வெளியிட்ட மணப்பெண்:


கடந்த மே 11 ஆம் தேதி அப்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமண முடிந்தவுடன் அவருக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது அவரது கன்னித்திரை ஏற்கெனவே கிழிந்திருப்பதை அறிந்தனர். இதனையடுத்து பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்தில் மணமகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் தர வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணை அவரது கணவரும், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனையடுத்தே அந்தப் பெண் தான் அனுபவித்துவரும் அவலங்கள் குறித்து ஒரு வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் என்று காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார். 


குக்கடி பிரதா சடங்கு:
இந்தியாவில் பல மாநிலங்களிலும் கன்னித்தன்மை பரிசோதனை சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதுவும் பழங்குடியின குழுக்களில் இது அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு பெண்ணின் ஒழுக்கத்தையும், குடும்பத்தின் மாண்பையும் இதைவைத்தே உறுதி செய்கின்றனர். காலங்காலமாக பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும் போது தான் கன்னித்திரையில் கிழிசல் உண்டாக வேண்டும். அப்பொழுது ஏற்படுவது தான் கன்னித்தன்மை இழப்பு என்று பொதுமைப்படுத்தி, அத்துடன் குடும்ப கவுரவத்தையும் சேர்த்து மொட்டைத் தலைக்கு முழங்காலுக்குமான முடிச்சு ஒன்று போட்டு வைத்துள்ளனர்.


ஆனால்,  பெண்கள் சைக்கிள் ஓட்டுவது, ஜிம்னாஸ்டிக் செய்வது, கடுமையான உடற்பயிற்சி செய்வது, மாதவிடாயின் போது டாம்பூன் பயன்படுத்துவது, சுய இன்பம் காண்பது இவற்றால் கூட பெண்களின் கன்னித் திரை கிழியலாம். அதுமட்டுமல்லாமல் சில பெண் குழந்தைகள் பிறக்கும் போதே கன்னித்திரை இல்லாமல் பிறக்கிறார்கள். பெண்களின் கன்னித்தன்மையை உறுதிப்படுத்தக் கூடிய மருத்துவ சோதனைகள் எதுவுமில்லை. எனவே கன்னித்திரை கிழிசல் என்பது இயற்கையான ஒன்றாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.