கர்நாடகாவில் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில்தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டம் திப்தூரைச் சேர்ந்த சந்திரப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு, ஜெயண்ணா ஆகிய 5 பேர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றுள்ளனர். அந்நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தும்கூருக்கு காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே கார் வந்து கொண்டிருந்தது. 


அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள காவிரி கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கால்வாயில் விழுந்த காரில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.






இதையடுத்து, அங்கு தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காரை காவிரிக் கால்வாயில் இருந்து மீட்டனர். அதில் பயணித்த 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி காருக்குள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து காவல்துறை அதிகாரி நத்தீஷ் கூறுகையில், ‘எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, 5 பேரும் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  பிரேத பரிசோதனை செய்ய உடல்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் உறவினர்கள்’ என தெரிவித்தார். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க: Nagpur Shocker : ஆபரேஷன் தியேட்டரில் டீ கொடுக்காததால் டாக்டர் செய்த சம்பவம்.. நோயாளிகள் அதிர்ச்சி