"எங்கள கடவுளுக்கு பிடிக்கலைனா பரவாயில்லை. நாங்க இனி அவர கும்பிட மாட்டோம். இனி, அண்ணல் அம்பேத்கர கும்பிட போறோம்" என கோபத்தின் உச்சியில் பேசுகிறார் ஷோபம்மா. இவரின் கிராமத்தில் நடைபெற்ற மத ஊர்வலத்தின் போது அவரது மகன் கடவுள் சிலையை தொட்டதால் ஷோபம்மாவுக்கு அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் ரூ 60,000 அபராதம் விதிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஏன் தெரியுமா? அவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்ததுதான் காரணம்.
கர்நாடகா பெங்களூரில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ள உல்லேரஹள்ளியில் ஷோபம்மா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். செப்டம்பர் 9 அன்று, ஷோபம்மா தனது மகனின் "குற்றத்திற்காக" தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால், திங்களன்று கோலாரின் சில தலித் அமைப்புகளிடம் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
செப்டம்பர் 8 அன்று, பூதையம்மா திருவிழாவை கிராம மக்கள் நடத்தியதால், கோயிலுக்குள் செல்ல தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை. கிராமத்தில் ஊர்வலம் செல்லும்போது ஷோபம்மாவின் 15 வயது மகன், தென்னிந்தியாவின் முக்கிய கிராம தெய்வமான சிடிரண்ணாவின் சிலையுடன் இணைக்கப்பட்ட கம்பத்தைத் தொட்டுள்ளார்.
கிராமவாசியான வெங்கடேசப்பா, அதைக் கவனித்து, அத்துமீறல் நடந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரை ஊர் பெரியவர்களிடம் ஆஜராகச் சொன்னார்.
அடுத்த நாள், பெரியவர்களைச் சந்தித்த ஷோபம்மா, அக்டோபர் 1ஆம் தேதிக்குள் 60,000 ரூபாய் அபராதம் கட்டச் சொன்னதையடுத்து அதிர்ச்சிக்கு ஆளானார். அபராதம் கட்டத் தவறினால், கிராமத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அக்கிராமத்தில் கிட்டத்தட்ட 75-80 வீடுகள் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கிராமத்தில் சுமார் 10 ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஷோபம்மாவின் வீடு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. அவரது மகன் தெகல் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஷோபம்மாவின் கணவரான ரமேஷ், பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டிருப்பதால், குடும்பத்தின் ஒரே ஆதாரமான அவர் வேலைக்கு செல்கிறார். “தினமும் காலை 5.30 மணிக்கு ரெயிலில் பெங்களூரு சென்று வைட்ஃபீல்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு பராமரிப்பு ஊழியராக வேலை செய்துவிட்டு இரவு 7.30 மணிக்கு திரும்புவேன்.
எனக்கு ரூ.13,000 சம்பளம், வீட்டை நடத்த வேண்டியதுதான் பணி. 60,000 அபராதம் விதிக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்று ஷோபம்மா கூறிகிறார்.
கிராமப் பெரியவர்கள் என்ன சொன்னார்கள் என்று கேட்டதற்கு, ஒரு தலித் சிறுவன் சிலையைத் தொட்டதால் அது தூய்மையற்றதாக மாறிவிட்டது என்றும், அதைச் சுத்தம் செய்து சிலைக்கு மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என்றும் ஷோபம்மா கூறினார்.
“கடவுளுக்கு நாங்கள் தொட்டால் பிடிக்கவில்லை என்றால் அல்லது மக்கள் எங்களை ஒதுக்கி வைக்க விரும்பினால், தெய்வத்தை வழிபட்டு என்ன பயன்? மற்றவர்களைப் போலவே நானும் பணத்தைச் செலவழித்திருக்கிறேன், கடவுளுக்கு நன்கொடை அளித்திருக்கிறேன். இனிமேல், நான் அப்படி எதுவும் செய்யமாட்டேன், டாக்டர் அம்பேத்கரை மட்டுமே இனி வணங்க போகிறேன்" என்கிறார் ஷோபம்மா.
சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற போதிலும், சாதிய கொடூரம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சக மனிதரை மனிதராக பார்க்காத குணம் சமூகத்தில் வேரூன்றி கிடக்கிறது. சாதி ஒழிப்பிற்காக பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இன்றும் சாதியம் தொடர்வதுதான் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டும் என்பதையே நமக்கு உணர்த்துகிறது.