பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் அதிகளவில் பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இதை தடுக்க முடியவில்லை. கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட (உத்தரப் பிரதேச சட்ட திருத்த) மசோதா 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.


 






உத்தர பிரதேச சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா, சட்டத்திருத்த மசோதா மீது சபையில் பேசுகையில், "போக்சோ சட்டம், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முன்ஜாமீன் மறுப்பது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்புகளை குறைக்கும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற சாட்சிகளை, குற்றம் சாட்டப்படுபவர்கள் மிரட்டுவதிலிருந்தும் துன்புறுத்துவதிலிருந்தும் 
தடுக்க இந்த ஏற்பாடு உதவும்" என்றார்.


உத்தரப் பிரதேச பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு (திருத்த) மசோதா, 2022, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், கலவரத்தில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடு கோருவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்களில் இருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பேசிய சுரேஷ் குமார் கன்னா, "கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்திற்கு இந்தத் திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. குற்றவாளியிடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி, கலவரத்தில் உயிர் இழந்தவரை சார்ந்திருந்த நபர் இழப்பீடு கோரி மேல்முறையீடு செய்யலாம்.


 






தீர்ப்பாயத்திற்கு இதுபோன்ற வழக்குகளை தானாக முன்வந்து விசாரணை நடத்த உரிமை உண்டு. இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கைக்கான செலவை குற்றவாளிகளே ஏற்க வேண்டும் என்றும் திருத்த மசோதா வழிவகை செய்கிறது" என்றார்.