மாநிலங்களவையில் மொத்தம் 57 எம்பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், காலியாகும் இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16 வேட்பாளர்கள்
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து வரும் நிலையில், முன்னதாக 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.
கர்நாடகாவுக்கான நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் அம்மாநிலத்திலிருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: P. Chidambaram : திமுகவுக்கு நன்றி.. அடுத்தடுத்து ட்வீட்! வேட்புமனு தாக்கலுக்கு நேரம் குறித்த ப.சிதம்பரம்!
கர்நாடகத்திலிருந்து மீண்டும் போட்டி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்கெனவே கர்நாடகாவில் இருந்துதான் தேர்வானவர் ஆவார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகளாக அவர் கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், நிர்மலா சீத்தாரமனுடன் நடிகரும் அரசியல் தலைவருமான ஜக்கேஷும் கர்நாடகாவிலிருந்து போட்டியிடுகிறார்.
முதலமைச்சர் கருத்து
இந்ந்லையில், முன்னதாக இதுகுறித்துப் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ”மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து பாஜக சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டியிடுகிறார். இது கட்சி மேலிடம் எடுத்த முடிவு. அதேபோல் நடிகர் ஜக்கேசும் போட்டியிடுகிறார்.
நான்காவது இடத்துக்கு எந்தக் கட்சியிடமும் போதுமான வாக்குகள் இல்லை. அதனால் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளரை நிறுத்துவதாக கூறியுள்ளது.
நாங்களும் அதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதன்படி முடிவு எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவிலிருந்து பியூஷ் கோயல் போட்டி
அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், அனில் பாண்டே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து லக்ஷ்மிகாந்த் வாஜ்பாய், ராதாமோகன் அகர்வால், சுரேந்திர சிங் நகர், பாபுராம் நிஷாத், தர்ஷனா சிங், சங்கீதா யாதவ் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் சதீஷ் சந்திர துபே, ஷம்பு சரண் படேல், உத்தரகாண்டில் இருந்து கல்பனா சைனி, ஹரியானாவில் கிரிஷன் லால் பன்வார், ராஜஸ்தானில் இருந்து கன்ஷ்யாம் திவாரி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: Karunanidhi Statue : உடைக்கப்பட்ட சிலை: உயிருள்ளவரை வேண்டவே வேண்டாமென மறுத்த கருணாநிதி! வரலாறு என்ன தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்