தமிழ்நாட்டின் மறைந்த முதல்வரும், திராவிட தலைவர்களில் ஒருவருமான கருணாநிதியின் சிலையை இன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திறந்து வைத்தார். இன்று 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் கருணாநிதியின் சிலையைப் போலவே, சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி சிலை இதே அண்ணாசாலையில் நிறுவப்பட்டு பின்னர் இடிக்கப்பட்டது என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருந்தபோது அப்போது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பெரியார் “தம்பி கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும்” என்று கூறினார். அப்போது, இடைமறித்து பேசிய கருணாநிதி, “முதலில் உங்களுக்கு சிலை அமைப்பதை பற்றி யோசிக்கிறேன். அதன்பிறகு இதைப்பற்றி பார்க்கலாம்” என்றார். கருணாநிதி தான் கூறியபடியே தந்தை பெரியார் உயிருடன் இருந்தபோது அவருக்கு சென்னையில் உள்ள சிம்சன் அருகே சிலை அமைத்தார்.
தி.க.வினரும் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணியைத் தொடங்கினர். கருணாநிதி தனக்கு சிலை அமைப்பதில் உடன்பாடில்லை என்று அறிவித்தார். ஆனாலும், தி.க.வினர் அண்ணா சாலையில் உள்ள தர்கா அருகே கருணாநிதிக்கு சிலையை நிறுவினர். பெரியாரின் மனைவி மணியம்மை தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில், குன்றக்குடி அடிகளார் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.
திராவிட கட்சிகளின் தவிர்க்க முடியாத தலைவர்களான பெரியார் சிலை சிம்சன் அருகேயும், அண்ணா சிலை வாலாஜா சாலை அருகேயும், தர்கா சந்திப்பு அருகே கருணாநிதியின் சிலையும், ஸ்பென்சர் பிளாசா அருகே எம்.ஜி.ஆர். சிலையும் அமைந்திருந்தன. 1987ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இயற்கை எய்தினார். இதனால், ஒட்டுமொத்த தமிழகமும் அப்போது சோகத்தில் மூழ்கியது.
எம்.ஜி.ஆர். மறைவால் துயரம் தாங்காத அ.தி.மு.க.வினர் சிலர் அண்ணாசாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை கடப்பாரையை கொண்டு சேதப்படுத்தியதுடன், அவரது சிலையையும் இடித்து தள்ளினர். அப்போது, இதைப்பற்றி முரசொலியில் எழுதிய கருணாநிதி, “ அந்த சின்னத் தம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சிலேதான் குத்துகிறான்” என்று எழுதினார்.
இதையடுத்து, கருணாநிதிக்கு மீண்டும் சிலை வைக்கலாம் என்று தி.க.வினர் கேட்டபோது, கருணாநிதி தனக்கு சிலை அமைக்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். பின்னர், அவரது சிலை அமைந்திருந்த இடத்தில் இருந்த சிலைபீடத்தையும் நீக்கச்சொல்லி உத்தரவிட்டார். பின்னர், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி கருணாநிதி காலமானார்.
பின்னர், அவரது சிலை தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் சிலை தி.மு.க.வினர் சார்பில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில்தான் கருணாநிதியின் மகனும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தந்தையின் முழு உருவ சிலையை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுவை சிலையை திறக்க வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “கருணாநிதி சிலையை எங்கு திறக்க வேண்டும் என சிந்தித்தபோது ஸ்டாலின் தான் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தை தேர்வு செய்தார்” எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் “தலைவர் கருணாநிதி சிலையை இந்த இடத்தில் நிறுவ ஒரு காரணம் உண்டு. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தை கருணாநிதி மிகவும் ஆசையாக கட்டினார். அது தற்போது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. அதனால்தான் அவர் சிலையை இங்கே நிறுவ முடிவு செய்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்