கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சிலை மீது ரத்தம் தெளித்த விவசாயிகளின் போராட்டத்தின் 50வது நாளான நேற்று (புதன்கிழமை) 25 பேரை மாண்டியா போலீஸார் கைது செய்தனர்.


முதல்வர் சிலை மீது ரத்தம் 


கரும்பு மற்றும் பாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விஸ்வேஸ்வரய்யா சிலை முன்பு ஐம்பது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மையின் சிலை மீது விவசாயிகள் கையில் கீறிக்கொண்டு ரத்தத்தை தெளித்தனர். உடனே போலீசார், விவசாயிகளை கைது செய்து போலீஸ் அணிவகுப்பு மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர்.



போராட்டத்திற்கென்று முறை உள்ளது


இதுகுறித்து மாண்டியா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.வேணு கோபால் கூறுகையில், “விவசாயிகளை போலீஸார் கைது செய்யவில்லை, தடுப்பு நடவடிக்கையாக கைது செய்து பின்னர் விடுவித்தோம். சட்டப்படி யாருக்கும் எதிராக எதிர்ப்பு தெரிவிக்க ஒரு வழி இருக்கிறது. இரத்தம் தெளிப்பது முறையல்ல. மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை அடுத்து, இதுபோன்ற செயலில் இருந்து விவசாயிகளை தடுத்துள்ளோம்,'' என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Vegetables Price: மக்களே இதை கவனிங்க.. காய்கறி வரத்தில் மாற்றம்.. காய்கறி விலையிலும் மாற்றமா? இன்றைய காய்கறி விலை நிலவரம்..


போராட்டத்தை கலைக்க முயற்சி


“போராட்டத்தை சீர்குலைக்க காவல்துறை விரும்புகிறது. இதனால், ஷாமியானா மற்றும் விவசாயிகள் தலைவர்களின் புகைப்படங்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். எங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்க 50 நாட்களாக அமைதியான முறையில் தர்ணா நடத்துகிறோம்” என்று கர்நாடக ராஜ்ய ரைதா சங்க (கேஆர்ஆர்எஸ்) தலைவர் படகலபுரா நாகேந்திரா கூறினார்.



விவசாய விளைபொருள் MSP


“விவசாய விளைபொருட்களுக்கான MSPயை (மினிமம் செக்யூரிட்டி ப்ரைஸ்) அறிவியல் பூர்வமாக நிர்ணயம் செய்ய மாநில அரசை வலியுறுத்துகிறோம். மைசூரு, மண்டியா, ராய்ச்சூர், பல்லாரி, பெலகாவி, பாகல்கோட் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறையை பயன்படுத்தி போராட்டத்தை சீர்குலைக்க மாநில அரசு முயற்சிக்கிறது,'' என்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாண்டியாவுக்கு வெள்ளிக்கிழமை வருகிறார் என்பதனால் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர்கள் மேலும் குற்றம் சாட்டினர். தலைமை மாற்ற பிரச்சனைகள் சென்றுகொண்டிற்கும் நிலையில் அதனை தீர்த்து வைப்பதற்காக அமித் ஷா கர்நாடகாவிற்கு நாளை வரும் நிலையில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்காக போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.