உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா அருகே உள்ள அரசுப் பள்ளியில் தலித் குழந்தைகள், மற்ற சாதிக் குழந்தைகள் எனத் தனித்தனி வரிசையில் மதிய உணவிற்காக அமரவைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் புதன்கிழமை விசாரிக்கத் தொடங்கினர்.


சாதிய பாகுபாடு நிகழ்த்தப்பட்டதா?


அல்மோரா மாவட்டத்தின் தாலியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பதினைந்து நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு பள்ளிக்குச் சென்ற அதிகாரிகள், பள்ளியில் ஜாதிப் பாகுபாட்டை சுட்டிக்காட்டும் வகையில் எதுவும் இல்லை என்றும், அந்த பள்ளியின் முதல்வரே ஒரு பட்டியலின சாதியைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்.  “பள்ளியில் மதிய உணவுக்கு சாதி இந்து மற்றும் தலித் மாணவர்களுக்கு தனித்தனி வரிசைகள் இருந்ததாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க விசாரணை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் கோபால் சிங் சவுகான் கூறினார்.



அதிகாரி விசாரணை


"குற்றச்சாட்டில் உண்மையில்லை என பள்ளி முதல்வர் கூறியுள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, அதன் பிறகு உண்மை தெரியவரும்,” என்று அவர் மேலும் கூறினார். இதற்கான பதில் ஆணை திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது என்றார். இதற்கிடையில், அல்மோராவின் செயல் தலைமைக் கல்வி அதிகாரி சத்ய நாராயண், தாசில்தார் பர்கா ஜலாலுடன் பள்ளிக்குச் சென்று பார்வையிட்ட பிறகு, மாணவர்களிடையே பாரபட்சம் இல்லை என்று தெரிகிறது என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Vegetables Price: மக்களே இதை கவனிங்க.. காய்கறி வரத்தில் மாற்றம்.. காய்கறி விலையிலும் மாற்றமா? இன்றைய காய்கறி விலை நிலவரம்..


பெற்றோர்களும் புகார் அளிக்கவில்லை


“அங்கே படிக்கும் பிள்ளைகளுடைய பெற்றோரிடம் பேசினோம். அவர்களில் யாரும் பள்ளிக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. பள்ளி முதல்வர் புவன் ராம் ஆர்யாவும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். முப்பத்து மூன்று மாணவர்கள் பள்ளியில் படிக்கின்றனர், அவர்களில் 22 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 11 பேர் பாட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள். அனைவருமே வரிசைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். ஒரு வரிசை பொதுப் பிரிவினருக்கும், மற்றொன்று பட்டியலின் மாணவர்களுக்கும் என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் இல்லை”, என்று அந்த அதிகாரி பிடிஐயிடம் தெரிவித்தார்.



விடியோவின் உண்மைத்தன்மை


புகார் அளித்தவர்கள் வெளியாட்கள் என்றும் அவர்களது குழந்தைகள் பள்ளியில் படிக்காதவர்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார். டிசம்பர் 13 அன்று வெளியான வீடியோவில் நான்கு மாணவர்கள் தனித்தனி வரிசையில் அமர்ந்திருப்பதாகக் கூறப்படும் வீடியோவைப் பற்றி, செயல் தலைமை நிர்வாக அதிகாரி பேசுகையில், "குறிப்பிட்ட அந்த நாளில் 10 பட்டியலின் மாணவர்கள் பள்ளிக்குச் வந்ததாக கூறினார். மேலும், "பட்டியலின மாணவர்களுக்கென பிரத்யேக வரிசை இருந்தால், வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி நான்கு பேர் மட்டும் அல்லாமல், 10 பேரும் ஒரே வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும் அல்லவா?," என்று அவர் கேள்வி எழுப்பினார். பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுடன் அவர்கள் பேசியதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.