பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பைஜு ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். விதிகளை மீறி, வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது.


அதிரடி காட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள்:


பைஜு ரவீந்திரன் மற்றும் அவரது நிறுவனம் 'Think & Learn Private Limited'க்கு வழக்கு தொடரப்பட்ட நிலையில், பெங்களூருவில் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு இடங்களிலும் குடியிருப்பு வளாகம் ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது.


பைஜூஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றம் நடந்ததற்கான பல்வேறு முக்கிய ஆவணங்களும் தரவுகளும் சோதனையின் போது சிக்கியதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2011ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பைஜூஸ் நிறுவனம் ₹ 28,000 கோடி (தோராயமாக) அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.


பைஜு ரவீந்திரனுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்:


இந்நிறுவனம் இதே காலகட்டத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சுமார் ₹ 9,754 கோடியை அனுப்பியுள்ளது. தனிப்பட்ட நபர்களால் பெறப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.


மேலும், பைஜு ரவீந்திரனுக்கு பல முறை சம்மன்கள் அனுப்பப்பட்டது. ஆனால், அவல் பதில் அளிக்காமல் தவிர்த்து வருகிறார். அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவில்லை.


2020-21 நிதியாண்டிலிருந்து நிறுவனம் தனது நிதிநிலை அறிக்கையை சமர்பிக்கவில்லை. கணக்குகளைத் தணிக்கை செய்யவில்லை. அறிக்கையை தயார் செய்து தணிக்கை செய்வது கட்டாயமாகும். விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 944 கோடி ரூபாய் அனுப்பி செலவு செய்திருப்பதாக பதிவு செய்துள்ளது.


எனவே, நிறுவனம் அளித்த புள்ளி விவரங்களின் உண்மைத் தன்மையை அறிய, வங்கிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளது.


பைஜூஸ் நிறுவனம் விளக்கம்:


புகார்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள பைஜூஸ் நிறுவனம், "நாங்கள் அதிகாரிகளுடன் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்தோம். அவர்கள் கோரிய அனைத்து தகவல்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எங்கள் செயல்பாடுகளின் ஒருமைப்பாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் இல்லை" என குறிப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க:


Wrestlers protest: நாட்டை நேசிப்பவர்கள் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்