டெல்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.


சர்வதேச மல்யுத்த போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க- எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம், மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, பாக்சிங் வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதி கிடைக்கும் வரை, போலீஸ் நிர்வாகம் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் போராட்டம் நடத்துவோம் என டெல்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


டெல்லி ஜந்தர் மந்தரில், பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய, மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை வெல்லும்போது நாம் அனைவரும் ட்வீட் செய்து, பெருமைப்படுகிறோம். ஆனால் இன்று அவர்கள் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள், நியாயம் கிடைக்கவில்லை.


பிரதமர் மல்யுத்த வீரர்களைப் பற்றி கவலைப்படுகிறார் என்றால், அவர்களை அவர் ஏன்? சந்திக்கவில்லை. ஏன் பிரிஜ் பூஷன் சிங்கை அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது என்றார்.


இதனை தொடர்ந்து  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், ”அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லது சாராதவர்கள் யாராக இருந்தாலும் நாம் நாட்டை நேசிப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இங்கு வந்து மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என்றார். நாங்கள் இந்த வீரர்களுக்கு அனைத்து ஆதரவுகளையும் தருவோம், அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மத்திய அரசு துண்டிக்க கூடாது என கேட்டுக் கொண்டார். 


 


மேலும் படிக்கஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் கணக்கை முடக்கிய ட்விட்டர் நிறுவனம்..! - காரணம் இதுதான்...!