Dog : பெங்களூருவில் பெண் ஒருவர், தான் வளர்த்த நாய் காணாமல் போனதை அடுத்து, அவரே கண்டுபிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலானோர் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். செல்லப்பிராணிகளை வளர்ப்பது பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு முக்கிய வழக்கமாக உள்ளது. குறிப்பாக, நாய்களை அதிலும் விலை உயர்ந்த உயர் ரக மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நாய்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். குடும்பத்தில் ஒரு நபராகவே அந்த செல்லப்பிராணிகளை கருதி, மிகுந்த பாசமுடன் வளர்த்து அதற்கேற்ற சகல வசதிகளையும் வீடுகளிலேயே செய்து தருகின்றனர்.
இந்நிலையில், பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த நாய் காணாமல் போனதை அடுத்து, அவரே தனது நாயை கண்டுபிடித்துள்ளார். அதில் சில சுவாரசிய சம்பவங்களும் நடந்துள்ளது.
நாய் கடத்தல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாநகரில் வசித்து வருபவர் சைத்ரா. இவர் 5 மாத ஹஸ்கி என்ற நாயை வளர்த்து வருகிறார். சைத்ராவின் நாய் ஹஸ்கி தானாகவே வெளியே சென்று வீட்டிற்கு திரும்பும். அப்படி ஒரு நாள், அந்த நாய் வெளியே சென்றுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் அந்த நாய் வராததால் சைத்ரா தான் வசிக்கும் பகுதியில் தேடியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், சைத்ராவின் நாயை திருடி செல்வதை பார்த்து பதறியுள்ளார். அந்த நபர்களை பிடிக்க செல்வதற்குள் அவர்கள் அந்த இடத்தில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசில் புகார் அளிப்பது என்பது, எந்த பயணம் இல்லை என்று எண்ணி, அவரே தனது நாயை கண்டுபிடிக்க முடிவு செய்தார். இதனால், நாய் உரிமையாளர்கள், விலக்கு ஆர்வலர்கள், செல்லப்பிராணி கடைகளை வைத்திருப்போர் என அனைவரிடமும் தனது நாய் காணாமல் போனது குறித்து விசாரித்துள்ளார்.
இதனை அடுத்து, அப்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். இப்படி தனது நாயை சைத்ரா தேடி கொண்டு இருக்க, இணையத்தில் தனது நாய் விற்கப்படுவதற்கான விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதேபோல் சிசிடிவி ஒன்றில், தனது நாயை திருடி சென்றவர்களின் வண்டி எண்ணை கண்டுபிடித்துள்ளார். ஆனால், திருடி சென்றவர்கள் முகமூடி அணிந்துள்ளதால், அவர்களின் முகம் சிசிடிவி காட்சியில் சரியாக தெரியவில்லை.
நாய் விற்பனை
இந்த மேற்கண்ட தகவல்களை வைத்து சைத்ரா போலீசிடம் தெரிவித்தார். இதனை அடுத்து, போலீசாருடன் சென்று நாய் விற்பனை விளம்பரத்தை இணையத்தில் பதிவிட்ட நபரை கண்டுபிடித்துள்ளார். அவர்கள், நாயை 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும், போலீசார் உதவியுடன் நாயை வாங்கிய நபரை கண்டுபிடித்து நாயை மீட்டனர்.
இதனை அடுத்து, தனது நாயை திருடியவர்கள் வயதில் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீது அளித்த புகாரை சைத்ரா வாபஸ் பெற்றுள்ளார். காணாமல் போன தனது நாயை, உரிமையாளரே கண்டுபிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.