உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது 45 வயது பெண்ணும் அவரது 20 வயது மகளும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.


பெண்கள் உள்ளே இருக்கும் போது அவர்களது குடிசைக்கு போலீசார் தீ வைத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இருவரும் தீக்குளித்ததாக உள்ளூர் போலீசார் கூறினர். ஆனால் இதுதொடர்பாக மாநில போலீசார் தற்போது 13 பேர் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மற்றும் புல்டோசர் ஆபரேட்டர் ஆகியோர் அடங்குவர். அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மாவட்டத்தின் ரூரா பகுதியில் உள்ள மடௌலி கிராமத்தில் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


அதிகாரிகள் புல்டோசருடன் காலையில் வந்ததாகவும், தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் கூறினர்.


"மக்கள் உள்ளே இருக்கும்போதே தீ மூட்டினார்கள். எங்களால் தப்பிக்க முடிந்தது. எங்கள் கோவிலை உடைத்துவிட்டார்கள். ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை. மாவட்ட மாஜிஸ்திரேட் கூட உடன் இல்லை. எல்லோரும் ஓடினர். யாராலும் என் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை" என்று இறந்தவரது மகன் சிவம் தீட்சித் கூறினார். 


தீக்குளித்தவர்களின் பெயர் பிரமிளா மற்றும் நேஹா என உள்ளூர் போலீசார் நேற்று கூறினர். ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி தினேஷ் கெளதம் மற்றும் பிரமிளாவின் கணவர் கெந்தன் லால் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயன்றபோது தீக்காயம் அடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு பெண்ணும் அவரது மகளும் குடிசைக்குள் தங்களைப் பூட்டிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர். நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் விசாரிப்போம் மற்றும் ஏதேனும் தவறு நடந்தால், குற்றவாளிகளை விட்டுவிட மாட்டோம்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் பிபிஜிடிஎஸ் மூர்த்தி கூறினார்.


மேலும் "எப்போது ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தாலும், அது குறித்து வீடியோ எடுக்கப்படும். நாங்கள் இதுதொடர்பான வீடியோவைக் கேட்டுள்ளோம். அதை விசாரிக்க உள்ளோம்" என்று மூர்த்தி கூறினார்.




இந்த மரணத்தை தொடர்ந்து, அப்பகுதியில் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. போலீசார் மீது கிராம மக்கள் செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கொலைக்கு காரணமான சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஞானேஷ்வர் பிரசாத், லெக்பால் சிங் மற்றும் பிறருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை அல்லது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.


கூடுதல் காவல்துறை இயக்குநர் அலோக் சிங், பிரதேச ஆணையர் ராஜ் சேகர் ஆகியோர் கிராமத்திற்குச் சென்று கூட்டத்தை அமைதிப்படுத்தினர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ”இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், நாங்கள் குடும்பத்துடன் இருக்கிறோம். பொறுப்பானவர்களை நாங்கள் விட்டுவிட மாட்டோம்," என்று ஒரு அதிகாரி கூறினார்.