தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வரவில்லை என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. இதில் மக்களவையில் திமுக எம்.பி.,யும், நாடளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு உரையாற்றினார். 


அப்போது, ‘தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பல விஷயங்களில் பாராமுகம் காட்டுகிறது. குறிப்பாக நீட் விலக்கு, வெள்ள நிவாரணம், மதுரை எய்ம்ஸ், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணி, சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களை சுட்டிக் காட்டினார். மேலும் தமிழ்நாட்டில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள்,அதிகாரிகள் குழு பார்வையிட்டனர். பின்னர் புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். 


அனைத்து கட்சி எம்.பி.,க்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நேரில் வற்புறுத்தினோம். ஆனால் இதுவரை தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட வரவில்லை என ஆதங்கப்பட்டு பேசினார். தொடர்ந்து பேசிய டி. ஆர்.பாலு, குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களை சேர்க்கப்படாததை பற்றி குறிப்பிட்டு பேசினார். மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இவற்றை ஏற்கவில்லை. 2014 ஆம் ஆண்டு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி சொன்னார். 


அப்படி பார்த்தால் இதுவரை 20 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு, ஜி.எஸ்.டி. திட்டத்தில் இருக்கும் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசினார். சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை. மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியத்தை குறைந்தப்பட்சம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இறுதியாக தனது உரையில் மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர்களின் தலையீடு குறித்தும் பேசினார். 




மேலும் படிக்க: Actor Vijay: ஆரம்பமே அதிரடி: அரசியல் சூழலை சரமாரியாக விமர்சித்த விஜய்- பயணிக்கப்போகும் பாதை என்ன?