மத்திய, மாநில அரசுகளை நடிகர் விஜய் விமர்சித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.


நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri Kazhagam) என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


புலி வருது புலி வருது கதையாக அல்லாமல், கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார் நடிகர் விஜய். அத்துடன் அரசியல் சூழலையும் சரமாரியாக விமர்சித்துள்ளார்.


அரசியல் அதிகாரம் தேவை


இதுகுறித்து இன்று அவர் சார்பில் தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.


ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் Vs பிளவுவாத அரசியல் கலாச்சாரம்


தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.


ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைப் பற்று உடையதாகவும் இருக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம், பிளவுவாத அரசியல் கலாச்சாரம் என்று அரசியல் சூழலை குறிப்பிட்டுள்ளாரா என்று கேள்வி எழுகிறது.


படங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள்


ஏற்கெனவே ’தலைவா’ படத்தின்போது Time To Lead என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா கோபமுற்று, படத்துக்குத் தடை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.


தொடர்ந்து ’கத்தி’ படத்தில், வெறும் காற்றை மட்டுமே வைத்து ஊழல் செய்ததாக 2ஜி அலைக்கற்றை குறித்து நடிகர் விஜய் பேசியிருந்தார். ’சர்கார்’ படத்தில் இலவசங்கள் குறித்துப் பேசியதும் திமுக, அதிமுக அரசுகள் அளித்த டிவி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட இலவசங்களைத் தூக்கி எறிந்த காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்து ’மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை விமர்சித்து நடிகர் விஜய் பேசியது பாஜக மத்தியில் கடுமையான எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.


நிஜத்திலும் விமர்சனம்


மத்திய, மாநில அரசுகளை நிழலில் (திரை) விமர்சித்து வந்த நடிகர் விஜய், இன்று நிஜத்திலும் விமர்சித்திருக்கிறார். இந்த நிலையில், அவரின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.