Indian Students: கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காக மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உக்ரைன், ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்திய மாணவர்கள் பலரும் மேற்படிப்பை படித்து வருகின்றனர். இதனால், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்திய மாணவர்கள் 403 பேர் உயிரிழப்பு:
அதே நேரத்தில், இந்திய மாணவர்கள் பலரும் உயிரிழந்தும் வருகின்றனர். இதனை தடுக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்கள் குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் கல்விக்காக சென்ற இந்திய மாணவர்களில் 403 பேர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இயற்கை காரணங்கள், விபத்துகள் என பல்வேறு காரணங்கள் இந்த உயிரிழப்புக்கு காரணமாக உள்ளன என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
முதலிடத்தில் கனடா:
34 நாடுகளில் இந்திய மாணவர்கள் படித்து வரும் நிலையில், கனடாவில் தான் அதிக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி, கனடாவில் கடந்த 6 ஆண்டுகளில் 91 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு பிறகு, இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தில் 48 பேரும், ரஷ்யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சைப்ரஸில் 14 பேரும், பிலிப்பைன்ஸ் மற்றும் இத்தாலி ஆகியல் நாடுகளில் தலா 10 பேர் என மொத்ம் 403 இந்திய மாணவர்கள் கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், " வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய அதீத முன்னுரிமை அளிக்கிறது.
இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னைகளுக்கும் வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்னுரிமை அடிப்படையில் பதிலளித்து வருகின்றன. இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா உறுதியாக உள்ளது" என்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
முன்னதாக, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், "வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்து வருகிறோம்.
மன உளைச்சலில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு தூதரக உதவிகள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளையும் வழங்கப்படுகின்றன. மேலும், மற்றும் தங்கும் வசதி போன்றவைகளுக்கும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் வழங்கி வருகிறது" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தொடரும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!
ஞானவாபி வழக்கு.. இஸ்லாமிய தரப்புக்கு பின்னடைவு.. அலகாபாத் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு