பண மோசடி வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர் ஜெயின், கடந்த மே 30ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது, இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ஹவாலா முறைகேடு வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில்,  சத்யேந்தர் ஜெயினை கடந்த மே மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.






28 கிலோ எடை குறைந்த சத்யேந்தர் ஜெயின்:


இந்நிலையில், தனக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்றும் அதனால் 28 கிலோ எடையை இழந்திருப்பதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் அமைச்சர் சத்யேந்திர் ஜெயின் குற்றம் சாட்டியுள்ளார். சரியான மருத்துவப் பரிசோதனை போன்ற சலுகைகளைக் கூட பெறவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.


மேலும் படிக்க: Delhi: "சாப்பாடு கூட ஒழுங்க தரல...30 கிலோ எடைய இழந்துட்டேன்.." நீதிமன்றத்தில் குற்றம்சாட்டிய அமைச்சர்..!


சத்யேந்தர் ஜெயின் உணவு உண்ணும் சிசிடிவி காட்சிகள்:


இந்நிலையில் தான், திஹார் ஜெயிலில் சத்யேந்தர் ஜெயினுக்கு முறையான உணவு கிடைப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 7 நிமிடங்களுக்கும் மேலாக ஓடும் அந்த வீடியோவில், உணவகங்களில் இருந்து பார்செல்களில் பல உணவு வகைகள், பழங்கள் மற்றும் சூப் போன்றவை வரவழைக்கப்பட்டு, அவற்றை சத்யேந்தர் ஜெயின் உண்பது பதிவாகியுள்ளது. மேலும், சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து, அவர் உடல் எடை 8 கிலோ கூடியுள்ளதாகவும் திஹார் சிறைச்சாலை தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.






அமைச்சருக்கு மசாஜ் செய்யும் வீடியோ:


முன்னதாக செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றதாக வெளியான வீடியோவில், சத்யேந்தர் ஜெயின் படுக்கையில் படுத்து இருக்க, நாற்காலியில் அமர்ந்து இருக்கும் ஒருவர் அமைச்சரின் கை, கால்களை பிடித்துவிட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. மற்றொரு வீடியோவில், படுக்கையில் படுத்து இருக்கும் அமைச்சருக்கு உதவியாளர் உடல் முழுவதும் மசாஜ் செய்துவிடுவதோடு, தலையில் ஆயில் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருந்தன.


ஊழல் வழக்கில் சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயினுக்கு ஆம் ஆத்மி அரசு சட்டவிரோத சலுகைகளை வழங்கியதாக, பா.ஜ.க கடுமையாக விமர்சித்தது. ஆனால், இரண்டு அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ள சத்யேந்திர ஜெயினுக்கு, சிறை விதிகளை பின்பற்றியே பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டதாக, ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.