பண மோசடி வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடந்த மே 30ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது, இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு, சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது விசாரணை தொடங்கியது.
28 கிலோ:
இந்நிலையில், தனக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்றும் அதனால் 28 கிலோ எடையை இழந்திருப்பதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் குற்றம் சாட்டியுள்ளார். திகார் சிறையில் சரியான உணவு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற சலுகைகளைப் பெறவில்லை என்றும் காவலில் இருந்தபோது சுமார் 28 கிலோ எடையை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சத்யேந்திர ஜெயின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, "நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை மீறியும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறியும் பல முக்கியமான தகவல்களை ஊடகங்களுக்கு அமலாக்கத்துறை கசியவிட்டுள்ளது. அவர்களின் செயலால் ஒவ்வொரு நிமிடமும் நான் அவமானப்படுகிறேன்" என்றார்.
சரியான உணவு கிடையாது:
திகார் சிறையில் சத்யோந்திர ஜெயினுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை சுமத்திய குற்றச்சாட்டுகளை ராகுல் மெஹ்ரா மறுத்தார். "என்ன சலுகைகளை பற்றி பேசுகிறீர்கள்" என்றும் வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா கேள்வி எழுப்பினார்.
"சிறையில் 28 கிலோ எடை இழந்துள்ளேன். சலுகைகளை பெறும் நபருக்கு இதெல்லாம் தான் கிடைக்குமா? எனக்கு சரியான உணவு கூட கிடைக்கவில்லை. என்ன சலுகை பற்றி பேசுகிறார்கள்? விசாரணை கைதி கை அமுக்கினாலோ கால் அமுக்கினாலோ எல்லாம் சிறை வீதி மீறப்படாது" என்றும் ராகுல் மெஹ்ரா கூறியுள்ளார்.
ராகுல் மெஹ்ரா சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த அமலாக்கத்துறை சார்பு வழக்கறிஞர் ஜோஹைப் ஹொசைன், "அமலாக்க இயக்குநரகத்தில் இருந்து ஒரு தகவல் கூட கசியவிடப்படவில்லை. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவருக்கு பிசியோதெரபி பரிந்துரைக்கப்பட்டது. அதனால், அது அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, திகார் அதிகாரிகள் பலர் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துணை நிலை ஆளுநரும் விசாரணையைத் தொடங்கியுள்ளார். சில உயர் அதிகாரிகளின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் தகவல்களை கசியவிட்டதாக சொல்வது அபத்தமானது. தகவல்கள் கசியவிடப்படவில்லை. இந்த குற்றச்சாட்டு ஏற்கனவே பொது தளத்தில் உள்ளது" என்றார்.
இதனை தொடர்ந்து வாதம் முன்வைத்த ஜெயின் தரப்பு வழக்கறிஞர், "மத்திய விசாரணை அமைப்புகள், ஏற்கனவே என்னை தூக்கு மேடையில் நிறுத்தி உள்ளது. அஜ்மல் கசாபுக்கு கூட நியாயமான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டது. நான் நிச்சயமாக அதை விட மோசமானவன் இல்லை. நான் கேட்பது நியாயமான சுதந்திரமான விசாரணை மட்டுமே" என்றார்.