ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், அனைத்து தரப்பு வாதங்களை ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


மேலும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.


வழக்கின் பின்னணி:


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தர பிறப்பித்தது.


இதையடுத்து, கடந்த ஆட்சியில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பின்னர், இந்த அவசர சட்டத்தையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கானது, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலன அரசியல் சாசன அமர்வுக்கு முன் விசாராணைக்கு வந்தது.  அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


தமிழ்நாடு அரசு தரப்பு:


அதில், அனைத்து தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


மேலும், ஜல்லிக்கட்டானது, மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் தமிழ் கலாச்சாரம் அழியும் நிலைக்கு தள்ளப்படும். விவசாயத்தை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.