பணமோசடி வழக்கில் இந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின், சிறையில் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களை சந்தித்து விசாரணையில் செல்வாக்கு செலுத்துவதாகவும் அமலாக்கத்துறை இயக்குனரகம் இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


அதற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை சமர்பித்துள்ளது. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், "திகார் சிறையில் உள்ள ஜெயின், மசாஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெறுகிறார். சிறைத்துறை அமைச்சராகவும் இருக்கும் ஜெயின், தனது பதவியை நியாயமற்ற முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளது.


சத்யேந்தர் ஜெயினை சிறைக் கண்காணிப்பாளர் தினமும் சந்திக்கிறார். இது விதிகளுக்கு எதிரானது. நீதிமன்ற உத்தரவை மீறி சிறையில் அவருக்கு வீட்டு உணவு வழங்கப்படுகிறது என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. சத்யேந்தர் ஜெயின் மனைவி பூனம் ஜெயின் சிறையில் அவரை அடிக்கடி சந்திக்க வருகிறார். இது சிறை விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


 






திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களான அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோரை சத்யேந்தர் ஜெயின் அடிக்கடி சந்திக்கிறார். சத்யேந்தர் ஜெயினின் அறை மற்றும் அவரின் வார்டின் சிசிடிவி காட்சிகளை அமலாக்கத்துறை கோரியிருந்ததாக திகார் சிறை நிர்வாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


வெளிநபர் யாரும் சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயை சந்திக்கவில்லை என சிறை நிர்வாகம் கூறுகிறது. மின்னணு கருவிகளை பயன்படுத்த ஜெயினுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை திகார் சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளது.


ஆகஸ்ட் 24, 2017 அன்று மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்கில் விசாரணையைத் தொடங்கியது.


இதையும் படிக்க: பாஜகவின் வழியை பின்பற்றுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? பொது சிவில் சட்டம் குறித்து பரபரப்பு கருத்து