மத்தியப் பிரதேசத்தில் திருட்டில் ஈடுப்பட்டதாக இளைஞர்கள் இருவர் ட்ரக்கில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். கூட்டம் மிகுந்த காய்கறி சந்தை வழியாக இந்த இளைஞர்கள் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். அந்த இரு இளைஞர்கள் மீதும் திருட்டு வழக்கை பதிவு செய்த போலீஸார் அவர்களை கொடூரமாக கட்டி இழுத்துச் சென்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.


இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு வியாபாரிகள் மற்றும் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரித்ததில் அந்த இரு சிறுவர்களும் டிரக்கில் இருந்து பணத்தை திருடியதைப் பார்த்ததாகத் தெரிவித்தனர். சிறுவர்கள் இருவரும் அந்த டிரக்கில் இருந்து காய்கறிகளை இறக்கிவைக்கவே அழைக்கப்பட்டனர். ஆனால் அப்போது அவர்கள் ட்ரக்கில் இருந்த காசை திருடிவிட்டனர் என்று புகார் கூறினர். 


வியாபாரிகளும், சில வழிப்போக்கர்களும் கூட அந்த இருவரையும் தாக்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்தூரில் காய்கறி மார்க்கெட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தூர் போலீஸ் அதிகாரி நிஹித் உபாத்யாயா கூறுகையில், அவர்கள் இருவரும் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. இரு சிறுவர்களையும் தரையில் முதுகுபடும்படி படுக்கவைத்து இழுத்துச் சென்றுள்ளனர். வீடியோவைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்போம் என்றார்.


கடனுக்காக இழுத்துச் செல்லப்பட்ட நபர்:


ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் பணத்தைத் திருப்பி தராததால் பணத்தைக் கொடுத்தவர்கள் இருசக்கர வாகனத்தில் அவரைக் கட்டி சாலைகளில் இழுத்துச் சென்ற சம்பவம் அண்மையில் நடந்தது. ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் 1500 ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் திருப்பி தரத் தாமதம் செய்துள்ளார். இதனால் பணத்தைக் கொடுத்தவர் ஆத்திரம் அடைந்து நான்கு இரு சக்கர வாகனங்களில் எட்டு பேரை அழைத்துக் கொண்டு கடன் வாங்கி ஒரு வீட்டிற்குச் சென்றார். 






பின்னர் கடன் வாங்கியவரின் கைகளைக் கட்டி அந்த கயிற்றை இருசக்கர வாகனங்களின் பின்புறம் கட்டிக் கொண்டுள்ளார். பின்னர் நான்கு இரு சக்கர வாகனங்களும் சாலையில் செல்ல இவர் சாலையில் ஓடி வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


கும்பல் மனநிலை:
இது மாதிரியான சம்பவங்களில் கும்பல் மனநிலை என்பதே பின்னணியாக இருக்கிறது என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக ஒரு நபர் தனியாக செய்ய நினைக்கும் காரியத்தை கும்பலாக இருக்கும் போது எளிதில் செய்யத் துணிந்து விடுகின்றனர். கல்வீச்சு, கலவரம், வன்முறை எல்லாம் இந்த மனநிலையில்தான் அரங்கேறுகிறது. உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு கும்பலுக்கு கூடுதலான தைரியம் பிறக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.