டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், ஆம் ஆத்மி கட்சியை பாஜகவின் 'பி' டீம் என சிலர் விமர்சித்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல, சமீபத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வைத்த கோரிக்கை பெரும் சர்ச்சைக்குள்ளானது.
ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் இந்துக் கடவுள்களான லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்துக் கடவுள்களான லட்சுமி, விநாயகர் படங்களை ரூபாய் நோட்டுகளில் சேர்ப்பது நாட்டுக்கு செழிப்பைத் தரும் என்றும் , தனது வீட்டில் தீபாவளி பூஜை செய்து கொண்டிருந்தபோது தனக்கு இந்த யோசனை வந்ததாகவும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
பாஜக செய்யும் அதே அரசியலை ஆம் ஆத்மி செய்து வருவதாக கெஜ்ரிவால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து அவர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கெஜ்ரிவால், "மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக மக்களை முட்டாளாக்குகிறது" என்றார்.
மாநில பாஜக அரசின் மீது சந்தேகத்தை கிளப்பியுள்ள அவர், "உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பாஜக அதே வாக்குறுதியை அளித்தது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதை நிறைவேற்றவில்லை. உத்தரகாண்ட் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் ஒரு குழுவை அமைத்தனர். ஆனால், பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
அவர்கள் இப்போது குஜராத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்துள்ளனர். அது தேர்தலுக்குப் பிறகு வீட்டுக்குச் சென்றுவிடும். அரசியலமைப்பு சட்டம் 44வது பிரிவின்படி, அதைச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெளிவாகக் கூறுவது போல, பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அது அனைத்து சமூகங்களின் சம்மதத்துடனும் கலந்தாலோசித்த பிறகு செய்யப்பட வேண்டும்.
பாஜக ஏன் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இதை செயல்படுத்தவில்லை. நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தவில்லை. மக்களவைத் தேர்தலுக்காக காத்திருக்கிறார்களா?" என்றார்.
மத அடிப்படையிலான சட்டங்களை நீக்கும் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாஜக நேற்று கூறியிருந்தது. இந்த விவகாரம், இஸ்லாமியர்களின் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருக்கிறது. பெரும்பாலான, இஸ்லாமியர்கள், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.