பணத்திற்காக தாயை கொன்ற கொடூரம்.. போதைப்பொருளுக்கு அடிமையான நபர் செய்த வெறிச்செயல்!
பணத்தை கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதைக்கு அடிமையான நபர் ஒருவர், 65 வயதுடைய தன்னுடைய தாயாரை கொலை செய்திருக்கிறார்.

போதைக்கு அடிமையான நபர் ஒருவர் தனது தாயாரை கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், 65 வயதுடைய தன்னுடைய தாயாரை கொலை செய்திருக்கிறார்.
போதைப்பொருளுக்கு அடிமையான மகன்:
வடகிழக்கு டெல்லி தயாள்பூர் பகுதியை சேர்ந்தவர் சோனு. ஓட்டுநரான சோனு தற்போது வேலையில்லாமல் இருக்கிறார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான இவர், பணத்திற்காக தனது தாயுடன் அடிக்கடி சண்டையிடுவது வழக்கம்.
வழக்கம்போல், கடந்த வெள்ளிக்கிழமை, தனது தாயிடம் பணம் கேட்டு சண்டையிட்டுள்ளார் சோனு. சோனுவின் தாயார், பணம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக சொல்லப்படுகிறது.
டெல்லியில் ஷாக் சம்பவம்:
இறுதியில், தனது தாயாரை சோனு கொடூரமாக கொலை செய்ததாக தெரிகிறது. அன்று இரவு 9 மணியளவில், தயாள்பூர் காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் குறித்து ஒரு அழைப்பு வந்தது. காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தபோது வயதான பெண் இறந்து கிடந்ததைக் கண்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட சோனு கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி, ஒரே நாளில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ கோகோயின் போதைப்பொருளை சிறப்புப் பிரிவு அதிகாரிகள் ரமேஷ் நகரில் பறிமுதல் செய்தனர்.
அதற்கு முன்பாக, டெல்லியில் 500 கிலோவுக்கும் அதிகமான கோகோயின் கைப்பற்றப்பட்டது. தெற்கு டெல்லியில் நடந்த சோதனைக்குப் பிறகு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்