தஞ்சாவூர்: தமிழக முதல்வர் ஸ்டாலின் தஞ்சைக்கு வருவதை ஒட்டி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல்வரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூருக்கு இருநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வருகை தர உள்ளார். இதையொட்டி முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் நடைபெறும் இடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று ஆய்வு செய்தார். தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழா,  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வருகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் கல்லணைக்கு சென்று நீர்வள ஆதாரத்துறையின் ஓய்வு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ளார். பின்னர் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மாலை 6 மணிக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடுகிறார்.இதையடுத்து அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சுற்றுலா மாளிகைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 2 கிலோ மீட்டரு தூரம் நடைபயணமாக சென்று, பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கவுள்ளார்.

பின்னர் இரவு சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள் (ஜூன் 16-ம் தேதி) காலை  அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடை பயிற்சி மேற்கொள்கிறார். பின்னர்  காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன்  இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். 

பின்பு காலை 11 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு  மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாவில் பங்கு பெற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். பின்னர் சுற்றுலா மாளிகை சென்று ஓய்வெடுக்கும் முதல்வர் மாலை 4 மணிக்கு  கார் மூலமாக திருச்சி விமான நிலையம் சென்று சென்னை செல்கிறார். 

முதல்வர் வருகையை ஒட்டி பழைய பேருந்து நிலையம் அருகே கருணாநிதி சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. முதன்மைச் சாலைகளில் மேடு, பள்ளங்கள் சீரமைப்பு பணி, சாலை தடுப்புச் சுவரில் வர்ணம் பூசும் பணி, புதை சாக்கடைகளில் கழிவு நீர் தேக்கத்தை சீர் செய்யும் பணி உள்ளிட்டவை முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதேபோல, கல்லணையிலும் தூய்மைப் பணி, வர்ணம் பூசம் பணி மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பகுதியிலிருந்து தஞ்சாவூர் வரை வழி நெடுகிலும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மக்களைச் சந்திக்கவுள்ளதால், சாலையோரம் தடுப்புக் கட்டைகள் கட்டி, மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், தஞ்சாவூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பங்கேற்கும் இடங்களில் முன்னேற்பாடுகள் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது எம்பிக்கள் ச.முரசொலி, சு.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகர், டி.கே.ஜி. நீலமேகம், சாக்கோட்டை க.அன்பழகன், நா.அசோக்குமார், மேயர் சண். ராமநாதன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.