ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழ்நாட்டில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை கோயில்களுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். 


தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கனும்:


தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அறுபடை முருகன் கோயிலுக்கும் நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார். திருத்தணியில் சாமி தரிசனம் செய்த பிறகு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 






அறுபடை ஸ்கந்தருக்கு நான் வேண்டிகிட்டு இருந்தேன். நாலரை வருடத்திற்குப் பிறகு வருவதற்கு கடவுள் அனுமதி தந்திருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்குது. கர்நாடக, தமிழ்நாடு 3, 4 நாள் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குது. தமிழ் மக்களுக்கு நம்ம நாட்டுக்கு எல்லாம் நல்லது நடக்கனும்னு வேண்டிகிட்டேன். 


இவ்வாறு அவர் கூறினார். 


ஆந்திர துணை முதலமைச்சர்:


தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண், ஜனசேனா கட்சியைத் தொடங்கி கடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியுடன் கூட்டணி வைத்து மாபெரும் வெற்றி பெற்றார். போட்டியிட்ட 27 இடங்களிலும் வெற்றி பெற்றார். 


பின்னர், ஆந்திராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பவன்கல்யாண் பல்வேறு அதிரடியான கருத்துக்களை அந்த மாநில அமைச்சர்களுக்கு எதிராக தெரிவித்து அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபகாலமாக அவர் ஆன்மீகவாதி தோற்றத்திலே தொடர்ந்து வெளியுலகில் தோன்றி வருகிறார். 


சனாதன யாத்திரை:


மேலும், அவர் திருப்பதி லட்டு விவகாரத்திற்குப் பிறகு சனாதனத்திற்கு அதிகளவு ஆதரவு அளித்து வந்தார். மேலும், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கு எதிராகவும், உதயநிதிக்கு எதிராகவும் ஏராளமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக - ஆந்திர அரசியல் மத்தியில் பெரும் மோதல் போக்கை அப்போது ஏற்படுத்தியது.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவன்கல்யாண் சனாதன யாத்திரையை நடத்துவதாக தகவல் வெளியானது. ஆனால், இது சனாதான யாத்திரை அல்ல என்றும், முருகப்பெருமானின் அறுபடை வீடு கோயிலுக்கு மட்டும் வேண்டிக்கொண்டு வருவதாகவும் பவன்கல்யாண் விளக்கம் அளித்தார். மேலும், இந்த ஆன்மீக பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.