நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. தேர்தல் ஆண்டு என்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல புதிய திட்டம்:


எதிர்பார்த்தபடியே, பெரிய அறிவிப்புகளும் புதிய திட்டங்கள் எதுவும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஆனால், பாதுகாப்புத் துறையை பொறுத்தவரையில், புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன்படி, பாதுகாப்பு துறைக்கு உயர் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.


மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்து அவர் பேசுகையில், "2024-25 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.94 லட்சம் கோடியிலிருந்து ரூ.6.21 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.5 சதவீதம் அதிகமாகும். 


உள்கட்டமை வசதிகளை மேம்படுத்தும் விதமாக பாதுகாப்புப் படைகளின் நவீனமயமாக்கலுக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2024-25ஆம் ஆண்டில் ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,000 புதிய விமானங்களை வாங்க இந்திய விமான நிறுவனங்கள் ஆர்டர் செய்துள்ளன" என்றார்.


பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?


 புவிசார் அரசியல் காரணமாக உலகளவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பட்ஜெட்டில் மற்ற துறைகளை காட்டிலும் பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வியூக ரீதியான தொழில்நுட்பத்தில் தற்சார்புடன் இயங்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 


நடப்பு நிதியாண்டான 2023-24இல் பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.25 லட்சம் கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23 நிதியாண்டில் ஆயுதங்களை நவீனமயமாக்கவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 


கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 6 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, 1.62 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2020 நிதியாண்டை ஒப்பிடுகையில் 57 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.


பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இது ஒரு ஊக்கமளிக்கும் பட்ஜெட். 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை எட்டுவோம் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்றார்.


இதையும் படிக்க: Budget 2024 LIVE: மாநிலங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில்லா கடன் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை