Watch Video: தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த பெண், பேருந்து நடத்துரை தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்:
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எல்பி நகரில் இருந்து தில்சுக்நகர் வழித்தடத்தில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஹயாத் நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், இலவச பேருந்து திட்டத்திற்கான அடையாள அட்டையை நடத்துனர் கேட்டார். ஆனால், அந்த பெண் தன்னிடம் அடையாளம் அட்டை இல்லை என்று கூறியிருக்கிறார்.
இதனால், பயணத்திற்கான கட்டணத்தை கொடுக்க வேண்டும் என்று நடத்துனர் கூறியுள்ளார். அந்த பெண், சரியான தொகையை தராமல் 500 ரூபாயை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது 10 ரூபாய் பயணச்சீட்டுக்கு ரூ.500 கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
நடத்துனரும் தன்னிடம் சில்லறை இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால், அந்த பெண் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நடத்துனர் இருக்கையில் அமருமாறும் கூறியதாக தெரிகிறது. அப்போது, மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தன்னிலை மறந்த அந்த பெண் நடத்துரை சரமாரியாக தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டத் துவங்கியுள்ளார்.
மேலும், அவரை தன் கால்களால் எட்டி உதைத்தும், ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தால், பேருந்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணித்த சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோ வைரல்:
அந்த வீடியோவில், பேருந்தில் இருந்த பெண் ஒருவர் நடத்துனரிடம் பயணச்சீட்டுக்கு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். சில நிமிடங்களாக நடத்துனரை தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார். அப்போது, அங்கு மற்றொரு பெண் நடத்துனர் வந்திருக்கிறார். அங்கு, ரகளையில் ஈடுபட்ட பெண்ணை சமாதானப்படுத்தியிருக்கிறார்.
இருப்பினும், அந்த பெண் தொடர்ந்து நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த பெண், நடத்துனரை காலால் எட்டி உதைத்து, அவர் மீது எச்சிலை துப்பியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், பேருந்தில் இருந்து இறங்கி செல்வது போன்று வீடியோவில் உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் வசிக்கும் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இந்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், தங்கள் வசிப்பிட அடையாள அட்டையை மட்டும் காண்பித்து பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.