கோர விபத்து நிகழ்ந்த ஒடிசாவின் பாலசோர் பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதனை பார்வையிட்டார்.


3 ரயில்கள் மோதி விபத்து:


ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் கடந்த 2ம் தேதி மாலையில், 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலரது உடல் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேநேரம், உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதேநேரம், விபத்து நிகழ்ந்த இடத்தில் துரித கதியில் மறுசீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்தது. தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டன. விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்ட நிலையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திலேயே கடந்த 3 தினங்களாக இருந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். அதோடு, புதன்கிழமைக்குள் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.


அசுர வேகத்தில் நடந்த பணிகள்:


விபத்து நடந்த பஹாநகா இடத்தில் உள்ள இருப்புப் பாதையில் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சுக்கு நூறாக சிதறி கிடந்த விரைவு ரயிலின் பெட்டிகள் உடன் சரக்கு ரயில் பெட்டிகள் என அனைத்தும் அகற்றப்பட்டன. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.






மீண்டும் தொடங்கிய ரயில் சேவை:


இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாநகா பகுதியில் 51 மணி நேரத்திற்குப் பிறகு, மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. முதலாவதாக சரக்கு ரயில் அந்த மார்கத்தில் பயணம் செய்தது. இதனை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.இதனை கண்டு உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் ரயிலை நோக்கி கைகளை கூப்பி கும்பிட்டார்.


”இதுதான் எங்கள் இலக்கு”


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ”காணாமல் போனவர்களை விரைந்து அடையாளம் கண்டு, அவர்களது குடும்பத்தினருடன் சேர்ப்பது தான் எங்களது கடமை. எங்களது கடமை என்பது இனும் முடிவடையவில்லை” என கூறினார். அப்போது ரயில்வேதுறையை சார்ந்த மூத்த அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். இந்தியாவின் கிழக்குப்பகுதியை தென் மாநிலங்களுடன் இணைப்பதில் இந்த வழித்தடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு நேர்ந்த கோர விபத்தால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமைக்குள் சீரமைக்க திட்டமிடப்பட்டு இருந்த ரயில் போக்குவரத்து, ஞாயிற்றுக்கிழமை இரவே சீரமைக்கப்பட்டு சேவையும் தொடங்கியுள்ளது.