இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜிபூஷன் சிங் சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். ஷாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகிய வீராங்கனைகளுக்கு பஜ்ரங் புனியா என்ற வீரர் துணையாக களத்தில் போராடி வருகிறார்.


இந்நிலையில் இவர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிஜ் பூஷண் சிங், என் மீதான ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபித்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை சுட்டிக்காட்டியுள்ள மாநிலங்களவை சுயேட்சை எம்.பி. கபில் சிபல், மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் தற்கொலை செய்து கொள்வதாக பிரிஜ் பூஷண் சிங் கூறுகிறார். இதனால் யாருக்கும் என்ன லாபம்?


இதேபோல் தான் அன்று மோடியும் கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அவர் கூறுகையில், பணமதிப்பிழப்பால் ஒரே ஒரு பாதிப்பு ஏற்பட்டது என்று நிரூபித்தால் என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். ஒரு 50 நாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார். அப்போதும் எந்த பலனும் ஏற்படவில்லை. இப்போதும் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறாக கபில் சிபல் கூறியுள்ளார்.


வீராங்கனைகள் போராட்டம்:


கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறினர். இதனையடுத்து குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.


விசாரணையின் அடிப்படையில் அவர்கள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அந்த அறிக்கையின் விவரத்தையும் கூறவில்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஏப்ரல் 23 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது அவர்கள் டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷண் சிங் மீது புதிதாக புகார் கொடுத்தனர். ஒரு சிறுமி உள்பட மூன்று வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் எஃப்ஐஆர் பதிவு செய்ய வலியுறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பிரிஜி பூஷண் மீது போக்ஸோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனால் வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.


இந்நிலையில் கடந்த மே 28ஆம் தேதி நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு பிரிஜ் பூஷணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து புதிய நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் போலீஸாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டனர். மேலும் ஜந்தர் மந்தரில் அவர்களின் போராட்டக் களமும் அப்புறப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தங்களின் பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்தனர்.


ஆனால் விவசாய சங்கத் தலைவர் திக்காத்தின் அறிவுறுத்தலின் பேரில் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். தற்போது அவர்கள் அரசுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் பிரிஜ் பூஷண் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளதை சுட்டிக் காட்டியே கபில் சிபல் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.