அண்மையில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் காவிரியில் கலக்கிறது என இறையன்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில், கழிவுகள் கலந்திருப்பதாக கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.
அம்மனுவில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவிரி தண்ணீரில் பல்வேறு வகையான கழிவுகள் கலக்கப்படுவதாகவும், அதுபற்றி கர்நாடக அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. மேலும் நீரில் கலந்து வரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 % மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது. அதனால் அபாயகரமான கழிவுகளோடுதான் காவிரி நீர் தமிழகத்துக்கு வருகின்றது.
இதனால் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதனால் கர்நாடக அரசு தமிழகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 400 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக கர்நாடக அரசை இடைத்தாக்கல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில், கர்நாடக அரசு அளித்திருந்த அறிக்கையில், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் மாசு கலந்திருப்பதை ஏற்றுக்கொண்டது.
மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், காவிரியில் கழிவுகள் கலப்பது குறித்து தமிழக, கர்நாடக மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
முன்னதாக பாமக தலைவர் அன்பும்ணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அத்துமீறலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகிறது.
அங்குள்ள ஆலையிலிருந்து புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் போன்ற 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுவதாகவும், மேட்டூரில் உள்ள பிற ஆலைகள், ஈரோடு, கரூர், திருச்சி என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காவிரியில் கழிவுகள் கலப்பதாகவும் இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.