Crime: உத்தரபிரதேசத்தில் கல்யாண விருந்தில் ரசகுல்லா பற்றாக்குறையால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் எட்பத்பூரில் கடந்த புதன்கிழமை ஒரு இஸ்லாமியர் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று காலை திருமணம் முடிந்து இரவு ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவில் கல்யாண விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ரசகுல்லா வேண்டும் என்று ஒருவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ரசகுல்லா இல்லாத காரணத்தினால் மணமகன் மற்றும் மணமகள் தரப்பு குடும்பத்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சிறிது நேரத்தில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் பெரியதாகி கைகலப்பாக மாறியது. அங்கு இருக்கும் தட்டு, கரண்டி, சொம்பு போன்ற பாத்திரங்களை ஒருவருக்கொரவர் வீசி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் யாரோ ஒருவர், ஒரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஒருவர் உயிரிழந்தது கூட தெரியாமல் அந்த இடத்தில் சண்டை தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கப்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்புக்கு சமாதானம் செய்து வைத்தனர். கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, எட்மத்பூர் வட்ட அதிகாரி ரவிக்குமார் குப்தா கூறுகையில், “ரசகுல்லா பற்றாக்குறை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கடுமையான மோதலாக மாறி, கல்யாண விருந்துக்கு வந்த ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதில் பலத்த அடைந்த சன்னி (22) என்பவர் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 5 பேர் எட்மத்பூரில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
Crime: காதல் மனைவியை தேடி வந்த கேரள இளைஞர்.... திருவண்ணாமலையில் உயிரிழந்த சோகம்