கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை கண்டித்து, பாஜக சார்பில் வருகின்ற 31ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து வரும் 31ஆம் தேதி பந்த் நடத்துவது கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என வெங்கடேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை முன்னதாகத் தொடர்ந்திருந்தார்.


’அண்ணாமலை பந்த்துக்கு அழைப்பு விடுக்கவில்லை'


இந்நிலையில், வரும் 31ஆம் தேதி கோவையில் முழு அடைப்பு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிக்கவில்லை என்றும், முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது சி.பி. ராதாகிருஷ்ணன் என்கிற தனி நபர் தான் எனவும் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பை மாநிலத் தலைமை அங்கீகரிக்கவில்லை எனவும் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் கோவையில் பந்த் நடத்தினால் காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி,  வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் 1ஆம் தேதி தள்ளி வைத்தது நீதிமன்றம்.


முன்னதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அண்ணாமலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி கோவையில் முழு அடைப்பு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிக்கவில்லை என்றும், முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது சி.பி. ராதாகிருஷ்ணன் என்கிற தனி நபர் தான் எனவும் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


கோவை கார் வெடிப்பு சம்பவம்


கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.


பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.


இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நேற்று  அஃப்சர் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 


பாஜக பந்த்


இந்நிலையில், “தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கையும், பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டுமென்ற எண்ணத்தை கண்டித்தும், கோவையை பயங்கரவாதிகளிடம் இருந்து காக்க வேண்டுமென்பதற்காக வருகின்ற 31ஆம் தேதி பந்த் நடத்தப்படும்” என சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.


முன்னதாக கோவையில் நிலவும் பதற்றமான சூழலில் பாஜகவின் பந்த் அறிவிப்பு அவசியமற்றது எனவும், பாஜக அறிவித்துள்ள பந்த் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல உள்ளது எனவும் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.


வானதி சீனிவாசன் திட்டவட்டம்


மேலும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இவ்விவகாரத்தை பாஜக அரசியலாக்குவதாக கூறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 


இந்நிலையில் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது. இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை. அதனை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.


முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” எனத்  தெரிவித்திருந்தார்.