ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மக்கள் என நாட்டு மக்களிடையே பல்வேறு விவகாரங்களை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. ஆனால், நாட்டு மக்களிடையே ஒத்திசையை கொண்டு வரும் வகையில் இந்த திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள காவல்துறைக்கு ஒரே சீருடையை கொண்டு வருவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி இன்று முன்மொழிந்துள்ளார். இது ஆலோசனை மட்டும்தான், திணிப்பு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநில உள்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட சிந்தனை அமர்வு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "காவல்துறைக்கான 'ஒரே நாடு, ஒரே சீருடை' என்பது ஒரு யோசனை மட்டுமே. நான் அதை உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. சற்று சிந்தித்து பாருங்கள். இது நடக்கலாம். ஐந்து, 50 அல்லது 100 வருடங்களில் நடக்கலாம். ஆனால் அதைச் சிந்திப்போம்.
நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கலாம். குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாள்வதில் மாநிலங்கள் இடையே இணக்கமான ஒத்துழைப்பு வேண்டும்" என்றார்.
சட்டம் ஒழுங்கில் மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான கொள்கையை கொண்டு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதை ஆதரித்து பேசிய மோடி, "கூட்டாட்சி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வு மட்டுமல்ல. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பொறுப்பாகவும் இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் இருந்தாலும், அவை நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தொடர்புடையது. ஒவ்வொரு மாநிலமும் கற்க வேண்டும். ஒருவருக்கொருவர் உத்வேகம் பெற வேண்டும். உள் நாட்டு பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசத்திற்கான பொறுப்பு. மத்திய மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் செயல்திறன், அதன் செயல்பாடுகளின் விளைவுகள் மற்றும் சாமானியர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும்.
சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக பாடுபடுவதால், பழைய சட்டங்களை மறுபரிசீலனை செய்து அவற்றை தற்போதைய சூழலுக்கு மாற்றுமாறு மாநில அரசாங்கங்களை வலியுறுத்துகிறேன்" என்றார்.