கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியின் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


மீண்டும் அதிகரிக்கும் கொரோனா அச்சம்:


இருப்பினும், பல்வேறு வைரசுகள் உருவாகி மக்களை தொடர்ந்து அச்சுறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 5,389ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4 கோடியே 46 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.


கடந்த 24 மணி நேரத்தில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் கெரோனாவால் உயிரிழந்தனர். கேரளாவில் இருவர் உயிரிழந்தனர். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தில் ஆகிய மாநிலங்களில்தான் கொரோனாவால் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.


ஒரே மாதத்தில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பின் சராசரி 6 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், கொரோனா தினசரி பாதிப்பின் சராசரி 112ஆக பதிவான நிலையில், இந்த மாதம் அது 626ஆக அதிகரித்துள்ளது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவோரின் விகிதம் 98.80 சதவிகிதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 கோடியோ 41 லட்சத்து 58 ஆயிரத்து 161 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவரின் விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது.


தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்: 


இதுவரை நாட்டில் 220.64 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.


அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, ”கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக  கடந்த சில வாரங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் நேற்று வரை  3,264 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த பாதிப்பானது அதிகரித்துள்ளது. மேலும் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போது இருக்க சூழ்நிலையில் அவசியமானதாக உள்ளது” என்றார்.


இதையும் படிக்க: Arm Transplant: 10 ஆண்டுகால தவிப்பு..16 மணிநேர அறுவை சிகிச்சை.. இரண்டு கைகள் பொருத்தப்பட்ட ஆசியாவின் முதல் நபர்